கொய்மலர் விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் காதலர் தினம்!

காதலர் தின கொண்டாட்டம் கொய்மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அடித்தளமாக இருக்கிறது.
கொய்மலர் விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் காதலர் தினம்!

திண்டுக்கல்: ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்துள்ள காதலர் தின கொண்டாட்டம், மற்றொரு புறம் கொய்மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அடித்தளமாக இருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 3 பதின்ம ஆண்டுகளாக மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்கு பின்னரே, காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்தன. காதலர் தினத்தன்று தங்களது இணைகளுக்கு வாழ்த்து அட்டை வழங்குவதைக்கூட ரகசியமாக வைத்திருந்த நிலை மாறி, பொதுவெளியில் பகிரங்கமாக காதலை வெளிப்படுத்தி பரிசுப்பொருள்களை வழங்கும் நிலை தற்போது உருவாகிவிட்டது. 

காதலர் தினத்தன்று விலை உயர்ந்த தங்க நகைகள் முதல், எளிமையான வாழ்த்து அட்டைகள் வரை, தங்கச் சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம், புகைப்படங்கள், பஞ்சு பொம்மைகள்(டேடி பியர்ஸ்), கேக், சாக்லெட், பூக்கள் என பல வகையான பொருள்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன.

என்னதான் விலை உயர்ந்த பொருள்களை தேடி தேடி பார்த்து வாங்கிக் கொடுத்தாலும், அந்த பரிசுப் பொருள்கள் ஒரு பூங்கொத்துக்கு இணையாக இருப்பதில்லை காதலிகளுக்கு. எனவே, காதலர் தினப் பரிசுப் பொருள்களில் பூங்கொத்து முக்கியத்துவம் மட்டுமின்றி முதலிடமும் பிடிக்கிறது.

கொடைக்கானல் கொய்மலர்கள

ரோஜா, ஜெர்ப்ரா, அந்தோரியம், கிரிஸாந்தமம், ஈஸ்டோமா, கார்னேஷன் ஆகிய கொய்மலர்கள், காதலர் தினத்துக்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கவுஞ்சி, கூக்கால், போளூர், கிளாவரை, மன்னவனூர், பூம்பாறை, குண்டுப்பட்டி, கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் நிழல்வலை குடில்களில் கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப சூழல், கொய்மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது.

கொய்மலர் அறுவடை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என 4 மாதங்கள் நடைபெறுவது வழக்கம். கொய்மலர்களுக்கான பிரதான சந்தை சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே உள்ளன. ஜனவரி இறுதியில் அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள், பிரத்தியேகமாக பார்சல் செய்யப்பட்டு பிப்.14-ல் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீண்டும் புத்துயிர் பெற்ற கொய்மலர் சந்தை

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு காரணமாக முடங்கி கிடந்த கொய்மலர் சந்தை, இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.மூர்த்தி கூறியதாவது:

அண்மைக் காலங்களில் திருமண விழா, வரவேற்பு விழா, பாராட்டு விழா என பல்வேறு விழாக்களிலும் கொய்மலர்களின் தேவை அவசியமாகிவிட்டது. இதன் காரணமாக கொய்மலருக்கு எல்லா காலங்களிலும் தேவை இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்துக்காக கூடுதல் தேவை இருப்பதால் விலையும் அதிகரித்துள்ளது.

20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.500-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டோமா மலர்கள் மட்டும் ரூ.600-க்கும் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் செய்யப்படாமல் குப்பையில் வீசப்பட்டு விவசாயிகள் கடுமையான இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு கொய்மலர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com