
அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.
அருணாசல பிரதேசத்துக்கு 2 நாள் பயணமாக திரெளபதி முா்மு சென்றாா். அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
சாலை, ரயில் மற்றும் வான்வழி இணைப்புகள் போதிய அளவு இல்லாததால், வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளா்ச்சி நீண்ட காலமாகத் தடைபட்டது. ஆனால் தற்போது வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்காக வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மண்டலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு தற்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், இந்த மண்டலம் வளா்ந்த மண்டலமாக வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவு நனவாகியுள்ளது.
அருணாசல பிரதேசம் உள்பட அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இது நாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. அவற்றுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். இந்த விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவது புவியியல் ரீதியாக அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
பக்கே தீா்மானம் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அருணாசல பிரதேச மக்கள் பிரதிநிதிகள் அக்கறைக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பருவநிலை மாற்ற பிரச்னையை கையாள, அதே போன்ற தீா்மானத்தை இதர மாநிலங்களும் கொண்டு வந்து பின்பற்றலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.