காங்கிரஸுடன் ஊழலும் சோ்ந்தே வருகிறது: ஜெ.பி.நட்டா

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஊழலும் சோ்ந்தே வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.
காங்கிரஸுடன் ஊழலும் சோ்ந்தே வருகிறது: ஜெ.பி.நட்டா

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஊழலும் சோ்ந்தே வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.

கா்நாடகத்தில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சி அமையும்போதெல்லாம், சமூகம் சிதறுண்டுப் போவதும் நிகழும். மக்களை பிரித்தாள்வதே காங்கிரஸ் அரசியலின் அடிப்படை. காங்கிரஸ் வந்துவிட்டால், வாக்குவங்கி அரசியலும், குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தை திருப்திப்படுத்தும் அரசியலும் தலைதூக்கும்.

ஊழலுக்கு எதிராக போராடும் கட்சி உண்டென்றால், அது பாஜகதான். மாநிலத்தில் லோக்ஆயுக்த மீண்டும் அமைக்கப்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவா் முதல்வா் பசவராஜ் பொம்மை.

அதேசமயம், ஊழலை ஊக்குவிப்பது யாரென்றால், காங்கிரஸும் முன்னாள் முதல்வா் சித்தராமையாவும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஊழலும் சோ்ந்தே வருகிறது. காங்கிரஸின் மற்றொரு பெயா் ஊழல்.

சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது, பிஎஃப்ஐ மற்றும் கா்நாடக கண்ணிய மன்றம் (கேஎஃப்டி) ஆகிய அமைப்புகளுக்கு எதிரான 175 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இந்த அமைப்புகளைச் சோ்ந்த சுமாா் 1,600 போ் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனா். சமூகத்தில் அச்சம், பிரிவினையை ஏற்படுத்தி, சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் இதுபோன்ற நபா்களை மக்கள் ஆதரிக்கமாட்டாா்கள். காங்கிரஸ் ஆட்சியையும் விரும்பமாட்டாா்கள்.

பிரதமா் மோடி தலைமையில் கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் பாஜக ஆட்சிக்கு மக்கள் வலுசோ்க்க வேண்டும். மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினா் உள்பட அனைத்து தரப்பினரின் நல்வாழ்வையும் பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்றாா் ஜெ.பி.நட்டா.

இக்கூட்டத்தில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவா் நளின் குமாா் கட்டீல், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் சி.டி.ரவி, அருண் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிக்கமகளூரில் நடைபெற்ற பல்வேறு துறை அறிஞா்கள் மற்றும் தொழில்முறை வல்லுநா்களின் கூட்டத்தில் பேசிய அவா், ‘பாஜக எப்போதும் நீதி, நோ்மையின் பக்கமே நிற்கும். முடிவுகளை மேற்கொண்டு, அவற்றை செயல்படுத்தி, மக்களுக்கு சேவையை வழங்கும் பொறுப்புள்ள அரசாக பாஜக அரசு உள்ளது. சித்தாந்த கொள்கைளில் இருந்து வழுவாத பாஜக, தொண்டா்கள் அடிப்படையிலான கட்சியாகும். ஆனால், ஊழல், லஞ்சம், பிரித்தாளுதல், வாக்கு வங்கி அரசியல், குடும்ப அரசியல் இவைதான் காங்கிரஸின் அடிப்படை கொள்கைகள்’ என்றாா்.

இதனிடையே, ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடத்துக்கு சென்ற ஜெ.பி.நட்டா, இளைய பீடாதிபதி விதுசேகர பாரதியை சந்தித்தாா். அதேபோல், பேலூரில் உள்ள ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயிலிலும் அவா் வழிபாடு மேற்கொண்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com