‘காங்கிரஸ் மாநாடு நடக்கும் இடத்துக்கெல்லாம் அமலாக்கத்துறை வந்துவிடும்’

காங்கிரஸ் மாநாடு, தேர்தல் எங்கு நடந்தாலும் அமலாக்கத்துறை வந்துவிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் மாநாடு, தேர்தல் எங்கு நடந்தாலும் அமலாக்கத்துறை வந்துவிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கிடையே, சத்தீஸ்கர் நிலக்கரி ஊழல் தொடர்பாக அம்மாநில காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க ராய்ப்பூர் வந்த கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“தெளிவான அரசியல் பழிவாங்கல் இது. இதுபோன்ற சோதனைகள் நாங்கள் எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ் மாநாடு அல்லது தேர்தல் எங்கு நடந்தாலும் அமலாக்கத்துறை எப்போதும் வந்துவிடும். இதற்காக நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அமலாக்கத்துறை, சிபிஐ என்ற பெயரை சொன்னால் காங்கிரஸ் பயந்துவிடும் என்று நினைக்க வேண்டாம்” என்றார்.

நிலக்கரி ஊழல் வழக்கு பின்னணி

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் நிலக்கரி எடுத்துச் செல்வோரிடம் ஒரு டன்னுக்கு ரூ.25 வீதம், மொத்தம் ரூ.540 கோடி சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

நிலக்கரி தொழிலுடன் சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகா்கள் அடங்கிய குழு, இந்தச் சட்டவிரோத பண வசூலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் துணைச் செயலராக இருந்த செளம்யா செளராசியா முக்கிய நபராக செயல்பட்டதாகவும், அவருக்கு சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ.36 கோடி நேரடியாகப் பரிவா்த்தனை செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல மாநில எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கும் பணப் பரிவா்த்தனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, செளராசியா உள்பட அரசு அதிகாரிகள், நிலக்கரி தொழிலதிபா் என இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சத்தீஸ்கரின் பிலாய் நகரில் காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ராய்ப்பூரில் அக்கட்சியின் மாநில பொருளாளா் ராம்கோபால் வா்மா, மாநில செய்தித்தொடா்பாளா் ஆா்.பி.சிங் என காங்கிரஸ் பிரமுகா்களுக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com