காங்கிரஸ் அரசு தடுக்காத பிபிசியின் சீக்கிய வன்முறை ஆவணப் படம்! அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பதில்!

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பிபிசி ஆவணப்படம் எடுக்காதது ஏன்? என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பிபிசியின் சீக்கிய வன்முறை ஆவணப் படம்
பிபிசியின் சீக்கிய வன்முறை ஆவணப் படம்

1984ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பிபிசி ஆவணப்படம் எடுக்காதது ஏன்? என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நேற்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பலரும், சீக்கிய வன்முறை தொடர்பாக 2010ஆம் ஆண்டு பிபிசி எடுத்து வெளியிட்ட ஆவணப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி இரண்டு ஆவணப் படங்களை வெளியிட்டிருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்த ஆவணப்படங்கள் அமைந்திருந்ததாகக் கூறி, பிபிசியின் ஆவணப் படங்களுக்கு மத்திய அரசு தடை வித்திருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவும் பேசுபொருளாகவும் மாறியது.

இந்த நிலையில், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மற்றும் வன்முறை தொடர்பாக பிபிசி ஆவணப்படம் எடுக்காதது ஏன் என்று மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், உண்மையில், 2010ஆம் ஆண்டு ஒரு மணி நேரம் ஓடும் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருக்கிறது. அந்த விடியோ இணைப்பை சமூக ஊடகத்தினர் தற்போது தூசு தட்டி வெளியிட்டு வருகிறார்கள்.

அப்போது டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அந்த ஆவணப்படத்தை யாரும் தடை செய்யவில்லை. அந்த இணைப்பு இப்போதும் பொதுமக்கள் பார்வைக்காக கிடைக்கப்பெறும் நிலையில்தான் உள்ளது என்றும் பலரும் அந்த விடியோவில் தங்களது கருத்தாகப் பகிர்ந்துள்ளனர்.

சமூக ஊடங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த ஆவணப்படத்தில், அமிருதசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து ப்ளு ஸ்டார் நடவடிக்கை எடுக்க அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி உத்தரவிட்ட போது என்ன நடந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து நடவடிக்கை எடுத்த போது சம்பவத்தின்போது அங்கிருந்த சிலரிடமும், நேரடியாக பேசி அவர்களது உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ டாங்கிகள் கோயிலுக்குள் நுழைந்ததை அவர்கள் வார்த்தைகளால் விவரிக்கிறார்கள். பிறகு, அங்கு பலர் சுட்டு வீழ்த்தப்பட்டு ஆங்காங்கே ரத்தம் சிதறிக் கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாதிகளின் உடல்கள் குவிக்கப்பட்டுள்ளன.  

பிறகு, பொற்கோவிலுக்குள் ரத்தக் கறைகள் சுத்தம் செய்யப்படும் காட்சிகளும், ராணுவ நடவடிக்கை குறித்து ராணுவ அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, பின்னணியில் ராணுவ பீரங்கிகள் வெடிக்கும் சப்தம், அவரை பேசவிடாமல் செய்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆவணப்படத்தில் தாக்குதலின்போது, பொற்கோவிலுக்குள் வழிபாடு செய்யச் சென்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விவரிக்கிறார்கள். 

பொற்கோவிலுக்குள் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, பொற்கோவிலுக்குள் இருந்த நூற்றுக்கணக்கான மக்களின் பாதுகாப்பை பொருள்படுத்தாமல், நடத்தப்பட்ட தாக்குதலை எப்போதும் தங்களால் நியாயப்படுத்த முடியாது என்று உற்றார் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் பரிதவிப்போடு கூறுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த சம்பவத்தின்போது புகைப்படக் கலைஞராக பணியாற்றிவரையும் நேரில் சந்தித்து அவருடைய பேட்டியும் இடம்பெற்றுள்ளது. கலவரத்தின்போது அவர் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தருணத்தில் நடந்த நிகழ்வுகளையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தங்களது குடும்ப புகைப்படங்களையும் காண்பித்து, இத்தனை பேரை சீக்கிய கலவரத்தில் இழந்ததை கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆவணப்படம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானபோது சீக்கியர்கள் தரப்பில் பல்வேறு விமரிசனங்களும் கண்டனங்களும் எழுப்பப்பட்டுள்ளன. ஆவணப்படத்துக்கு எதிராகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன என்பது அப்போது வெளியான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

தற்போது, இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com