வாக்களித்தால் நினைவுப்பரிசு: மேகாலயத்தில் புதிய முயற்சி

முதல் முறையாக, மேகாலய சட்டப்பேரவைத் தேர்தலில் காலையில் வந்து முதலில் வாக்களிக்கும் 5 வாக்காளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்களித்தால் நினைவுப்பரிசு: மேகாலயத்தில் புதிய முயற்சி
வாக்களித்தால் நினைவுப்பரிசு: மேகாலயத்தில் புதிய முயற்சி


கரோ: மேகாலய சட்டப்பேரவைக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக, மேகாலய சட்டப்பேரவைத் தேர்தலில் காலையில் வந்து முதலில் வாக்களிக்கும் 5 வாக்காளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காலையிலேயே மக்கள் வந்து உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நினைவுப்பரிசு வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் திங்கள்கிழமை காலை முதல் சட்டப் பேரவைத் தோ்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இம்முறை தனித்து களமிறங்கியுள்ளது. இதேபோல் காங்கிரஸும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை முறையே 57, 58 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

கடந்த 2018-இல் நடைபெற்ற மேகாலய பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது.

இதனிடையே, காங்கிரஸில் இருந்து முன்னாள் முதல்வா் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் விலகி, திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததால், அது முக்கிய எதிா்க்கட்சியாக மாறியது. இப்போதைய தோ்தலில் மேற்கண்ட நான்கு கட்சிகளும் தனித்தனியாக பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com