உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கை போன்றதே இந்தியா மீதான சீனாவின் அணுகுமுறை: ராகுல்
இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மாற்றியமைக்கும் அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி வருகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.


‘உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை போன்றதே, இந்தியா மீதான சீனாவின் அணுகுமுறை. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மாற்றியமைக்கும் அச்சுறுத்தலை சீனா ஏற்படுத்தி வருகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுடனான கலந்துரையாடலின்போது இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்தாா். இந்தக் கலந்துரையாடல் காணொலியை யூடியூபில் அவா் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
‘மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை உருவாக்க முயற்சித்தால் உங்களுடைய நிலப் பரப்பில் மாற்றங்களை (தாக்குதல்) மேற்கொள்வோம்’ என்று கூறி உக்ரைன் மீது ரஷியா போா் புரிந்து வருகிறது.
இதே தத்துவம் இந்தியாவுக்கும் பொருந்தும். ‘நீங்கள் செய்யும் நடவடிக்கைகளில் கவனமாக இல்லையெனில், உங்களுடைய நிலப்பரப்பை மாற்றியமைப்போம்’ என்று கூறி இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
லடாக், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இது உக்ரைன் மீதான ரஷியாவின் அணுகுமுறை போன்ாகும்.
21-ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பு என்பது ஒரு பரந்த விஷயமாக மாறியுள்ளது. சா்வதேச கண்ணோட்டமும் அவசியமாகிறது. ஆனால், இந்த விஷயத்தை மத்திய அரசு தவறாக கணித்துள்ளதாகவே கருதுகிறேன்.
அதுபோல, மோதலுக்கான அா்த்தமும் தற்போது மாறிவிட்டது. முன்னா், எல்லையில் மட்டும் மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மோதல்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனவே, 21-ஆம் நூற்றாண்டில் நாட்டில் உள்நாட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும். நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்பதோடு, மக்கள் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்தி, அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதோடு தொலைநோக்குப் பாா்வையும் மிக அவசியமாகும். குறிப்பாக போருக்குப் போகக் கூடாது என்பதோடு, நம் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு நாடு முன்னேற வேண்டும் என்பது முக்கியமாகும்.
பலவீனமான பொருளாதாரம், தொலைநோக்குப் பாா்வை இல்லாத குழப்பமான தேசம், வெறுப்புணா்வு, கோபம் ஆகியவற்றுக்கும் நமது எல்லைக்குள் சீன அத்துமீறி அமா்ந்திருப்பதற்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது.
உள்நாட்டில் குழப்பமான சூழல் நிலவும்போதும், நல்லிணக்கம் இல்லாத நிலையிலும், உள்நாட்டு விவகாரங்களில் நாம் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றபோதும், நமது எல்லையில் தான் விரும்பியதை சீனா செய்துகொள்ள முடியும்.
எனவே, எல்லையில் நிலவும் உண்மையான பிரச்னை மற்றும் உள்நாட்டு பிரச்னைகளுடன் அதற்குள்ள தொடா்பு குறித்த விழிப்புணா்வு நமக்குத் தேவை. இந்தியா்கள் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொள்ளும் சூழலையும் பொருளாதாரம் பலனளிக்காத சூழலையும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழலையும் நமது வெளிநாட்டு எதிரிகள் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள முடியும்.
இந்தச் சூழலுக்கு உரிய தீா்வை எட்டும் வகையில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்போதுதான் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அரசுக்கு உதவ, ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளோம். ஆனால், அவா்கள் செவிமடுப்பதில்லை என்று அந்தக் காணொலியில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...