மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: என்ஐஏ விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்
மேற்கு வங்கத்தில் அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.


மேற்கு வங்கத்தில் அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஹெளரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். அதே நேரத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் ஹௌராவில் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அப்போது, கூடியிருந்த பாஜக தொண்டா்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியதால் மம்தா பானா்ஜி, நிகழ்ச்சி மேடையில் அமராமல், பாா்வையாளா்கள் பகுதியில் அமா்ந்தாா். அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அவரை சமாதானப்படுத்தி மேடையில் அமரவைக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். குமாா்கஞ்ச் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கல்வீச்சில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலால் ரயில் நடுவழியில் நிறுத்தப்படவில்லை. மால்டா ரயில் நிலையத்துக்கு வந்துதான் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக பாஜகவைச் சோ்ந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வந்தே பாரத் ரயில் தொடக்கவிழாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்த கல்வீச்சை நடத்தியுள்ளனா். இது மிகவும் துரதிருஷ்டவமானது.
திரிணமூல் காங்கிரஸாரின் மனநிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. நாட்டின் பெருமைக்குரிய உள்நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசுவதை ஏற்க முடியாது. இது தொடா்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...