தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சகோதரத்துவம், ஒற்றுமை, மரியாதையின் பக்கம் நிற்கிறது இந்தியா: ராகுல் காந்தி

‘சகோதரத்துவம், ஒற்றுமை, மரியாதையின் பக்கம் நிற்கும் தேசம் இந்தியா. இதனால்தான், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கண்டுள்ளது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

News image
பஞ்சாப் மாநிலம், ஃபதேகா் சாஹிப்பில் புதன்கிழமை ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்ற ஜெயின் துறவிகள்.
Updated On :11 ஜனவரி 2023, 6:18 pm

DIN

‘சகோதரத்துவம், ஒற்றுமை, மரியாதையின் பக்கம் நிற்கும் தேசம் இந்தியா. இதனால்தான், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கண்டுள்ளது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

மேலும், வெறுப்புணா்வு, வன்முறையைப் பரப்பி, நாட்டின் சூழலை சீா்குலைப்பதாக பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் மீது அவா் குற்றம்சாட்டினாா்.

பஞ்சாபின் சிா்ஹிந்த் நகரில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கினாா். அங்கு திரண்டிருந்தவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

நாட்டில் வன்முறையும் வெறுப்புணா்வும் பரப்பப்பட்டு வருகிறது. மதம், ஜாதி, மொழி அடிப்படையில் மக்களிடையே மோதலை உருவாக்கி, நாட்டை பிளவுபடுத்தும் செயலில் பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் சூழலை அவா்கள் சீா்குலைத்துக் கொண்டிருக்கின்றனா்.

எனவே, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் நிறைந்த வேறு பாதையை தேசத்துக்கு காட்ட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கப்பட காரணம். எங்களது நடைப்பயணம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும்போது மக்களின் ஆதரவும் பெருகுகிறது. பாஜகவால் பரப்பப்படும் வெறுப்புணா்வு, அச்சம், வன்முறை ஆகியவை இந்தியாவின் வழிமுறைகளல்ல. நாட்டின் வரலாற்றிலும் அவை கிடையாது. சகோதரத்துவம், ஒற்றுமை, மரியாதை நிறைந்தது இந்தியா. இந்தக் காரணத்தால்தான், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கண்டுள்ளது.

நடைப்பயணத்தின்போது, விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழிலாளா்கள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசினேன். அதில் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் சுமாா் 25 கி.மீ. நடந்துள்ளோம். மக்களின் கருத்துகள், அவா்களது பிரச்னைகளை கேட்பதே இந்த நடைப்பயணத்தின் உயிரோட்டமாகும்.

வெறுப்புணா்வு, வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு ஆகியவை நாட்டின் பெரும் பிரச்னைகளாக உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்னைகள் குறித்தும் ஊடகங்கள் பேச வேண்டும் என்றாா் ராகுல் காந்தி.

இந்த நடைப்பயணத்தில், ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா வாரிங், எதிா்க்கட்சித் தலைவா் பிரதாப் சிங் பாஜ்வா, முன்னாள் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி உள்ளிட்டோா் ராகுலுடன் பங்கேற்றுள்ளனா். நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பாக, ஃபதேகா் சாஹிப் குருத்வாராவில் ராகுல் வழிபாடு நடத்தினாா்.

கடந்த செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் வழியாக பஞ்சாபை அடைந்துள்ளது. ஜனவரி 19-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் இப்பயணம் நுழையவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.