ஜோஷிமட்: கனத்த இதயத்தோடு ஊரை காலி செய்யும் மக்கள்

இனி இங்கு வாழ முடியாது என்று தெரிந்து கனத்த இதயத்தோடு ஜோஷிமட் நகர மக்கள் ஊரை காலி செய்து வருகிறார்கள்.
ஜோஷிமட்: கனத்த இதயத்தோடு ஊரை காலி செய்யும் மக்கள்
Published on
Updated on
2 min read

ஜோஷிமட்: உத்தரகண்டில் உள்ள ஜோஷிமட் நகரப் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இனி இங்கு வாழ முடியாது என்று தெரிந்து கனத்த இதயத்தோடு அப்பகுதி மக்கள் ஊரை காலி செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகிக் கொண்டே செல்வதும், மேலும் பல வீடுகளில் புதிதாக விரிசல்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.
இதுவரை பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 700-ஆக உயா்ந்துள்ளது. அங்கிருந்து இதுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

வீட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல், விரிசல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தவர்களும் கூட, இனி இங்கு வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டு கனத்த இதயத்தோடு வீட்டை காலி செய்து கொண்டு செல்கிறார்கள்.

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிா்வாகம் சிவப்பு குறியிட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவா்களை தற்காலிக நிவாரண முகாம்கள் அல்லது வாடகைக்கு வேறு இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 16 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பொதுமக்களைத் தங்க வைக்க கூடுதலாக 19 ஹோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள், பள்ளிக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே பீபல்கோட்டி பகுதியிலும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கான இடங்கள் தயாராக உள்ளன.

ஆபத்தான நிலை என்றபோதிலும் வீடுகளைப் பிரிய மனமில்லாமல் அப்பகுதி மக்கள் பலா் அங்கேயே தங்கியிருந்தனர். தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டவா்களும் சேதமடைந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருவதும், நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்தும் வந்தனர்.

சுரங்கப்பாதை, சாலை கட்டுமானம் தான் காரணமா?

தேசிய அனல் மின் கழகம் சாா்பில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை, அனைத்து வானிலைகளிலும் பயணிக்கக் கூடிய சாா்தாம் சாலை கட்டுமானம் ஆகியவையே நகரப் பகுதிகள் புதையும் பிரச்னை தீவிரமடைய காரணம் என்று மாநில காங்கிரஸ் மற்றும் உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனினும் பிரச்னை குறித்து விரிவாக ஆராய்ந்த பிறகே, அதற்கான காரணத்தை உறுதி செய்ய முடியும் என்று உத்தரகண்டில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் காலாசந்த் சேன் தெரிவித்துள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com