பாஜக அரசின் நோக்கம் வாக்கு வங்கி அல்ல! பிரதமர் மோடி

வாக்கு வங்கியல்ல; வளர்ச்சிதான் பாஜக அரசின் நோக்கம் என்றார் பிரதமர் மோடி.
பாஜக அரசின் நோக்கம் வாக்கு வங்கி அல்ல! பிரதமர் மோடி

வாக்கு வங்கியல்ல; வளர்ச்சிதான் பாஜக அரசின் நோக்கம் என்றார் பிரதமர் மோடி.

கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம், கொடேகல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,050 கோடி மதிப்பிலான யாதகிரி மாவட்ட  பல்கிராம குடிநீர்த் திட்டம், 117 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரத் சென்னை விரைவு சாலையில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 65.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கவிருக்கும் 6 வழிசாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியும், கலபுர்கி, யாதகிரி, விஜயபுரா மாவட்டங்கள் பயன் பெறும் நாராயணபூர் இடதுகரை கால்வாய்த் திட்டத்தைத் தொடங்கிவைத்தும் அவர் பேசியதாவது: 

கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள், வளர்ச்சிப் பணிகள் எதையும் செயல்படுத்தவில்லை. தற்போது கர்நாடகத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி இருப்பதால் பொதுமக்களுக்கு இரட்டை என்ஜின் அரசு செயல்பட்டு வருகிறது. 
இரட்டை என்ஜின் அரசு எந்தக் காலத்திலும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை. நாட்டின் வளர்ச்சிக்குத்தான் முன்னுரிமை அளிப்போம். நூற்றுக்கணக்கான மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். 

வாக்கு வங்கி அரசியல் காரணமாக இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாதகிரியை பின்தங்கிய மாவட்டம் என்று அறிவித்து கடமையில் இருந்து நழுவிக் கொண்டது முந்தைய காங்கிரஸ் அரசு. நாங்கள் அப்படியல்ல. பின்தங்கியுள்ளதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைக் கண்டிருக்கிறோம். 

இப் பகுதியில் அடிப்படை கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு தொடர்ந்து பாடுபடும். 

நமது நாட்டில் 'ஒருதுளி நீரில் அதிக விளைச்சல்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நிலத்தடிநீர் மேம்பாட்டுக்கும், ஏரிகள் மேம்பாட்டுக்கும் இரட்டை என்ஜின் அரசு உழைக்கும். 

வீட்டுக்கு வீடு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரட்டை என்ஜின் என்றால், இரட்டிப்பு வேகம், இரட்டிப்பு லாபமாகும். 

இரட்டை என்ஜின் அரசால் அனைவருக்கும் பயன் கிடைக்கும். எரிசாராய (எத்தனால்) கொள்கையால் கர்நாடகத்தின் கரும்பு விவசாயிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். 2023}ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கிறோம். கேழ்வரகு உள்பட சிறுதானிய விவசாயத்தால் கர்நாடகம் பெரிதும் பயன் அடையவிருக்கிறது. 

அடுத்த 25 ஆண்டுகாலம் மாநிலங்களுக்கு அமிர்த காலமாக இருக்கப் போகிறது. இக் காலக்கட்டத்தில் விவசாயம், தொழில் வளர்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகம் பயனடைந்து வருகிறது என்றார். 

விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

52,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா: கலபுர்கி மாவட்டம், மல்கேடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று 7 மாவட்டங்களைச் சேர்ந்த லம்பாணி சமுதாயத்தின் நாடோடி மக்கள் 52 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:

கலபுர்கி, பீதர், யாதகிரி, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தாண்டாக்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரும். 

1993-ஆம் ஆண்டிலேயே தாண்டாப் பகுதிகளை வருவாய் கிராமங்களாக மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு லம்பாணிகளை வாக்குவங்கிகளாக வைத்திருந்தார்கள். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்கவே இல்லை. அவர்களின் தேவைகள் இனி நிறைவேறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com