
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடும் திட்டம் வரவேற்கத்தக்கது; தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாமக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிக்க | மாநில மொழிகளில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கனவே 17.07.2019-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.