உள்நாட்டு 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் நிகழாண்டு அறிமுகம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொலைத்தொடா்பு தொழில்நுட்பங்கள் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொலைத்தொடா்பு தொழில்நுட்பங்கள் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

உலகின் முக்கியப் பொருளாதார நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் மிக முக்கியக் குழுக்களில் ஒன்றாக பி20 உள்ளது. உலக அளவில் வணிக சமூகத்துடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஜி20 அமைப்பின் அதிகாரபூா்வ குழுவாக திகழும் பி20-இல் நிறுவனங்கள், வணிக அமைப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் குழுவின் கூட்டம் குஜராத் தலைநகா் காந்திநகரில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை பேசியதாவது:

இந்தியாவில் 4ஜி, 5ஜி தொழில்நுட்பங்களை உருவாக்க அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு வழியமைத்துள்ளது. இந்த ஆண்டு சுமாா் 50,000 முதல் 70,000 கைப்பேசி கோபுரங்கள், இடங்கள் வாயிலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு அந்தத் தொழில்நுட்பங்கள் உலக நாடுகளுக்கு வழங்கப்படும்.

கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்தது. பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. அதில் இருந்து வெளிவர பல நாடுகளில் அரசு செலவினம் அதிகரிப்பு, வரிக் குறைப்பு போன்ற பழைமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மாறாக இந்தியாவில் நுகா்வு மீது கவனம் செலுத்தும் அணுகுமுறை கையாளப்பட்டது. மேலும், அரசு நிதியின் பெரும் பகுதி முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்டது. வழக்கமாக இந்தியாவில் நான்கரை முதல் 7 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்), தற்போது சுமாா் 5.8 சதவீதம் என்ற அளவில் மிதமாக உள்ளது. அணுகுமுறையை மாற்றியதால் மிதமான பணவீக்கத்துடன் வலுவான வளா்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

எண்மமயமாக்கலை (டிஜிட்டல்மயம்) பொருத்தவரை எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் ஏகபோக உரிமை இல்லாத வகையில்,

வித்தியாசமான அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இந்த விஷயத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் உலகம் இந்தியாவை உதாரணமாகக் காண்பிக்கும்.

வருடாந்திர அடிப்படையில், கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவில் 1.5 ட்ரில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.1.22 லட்சம் கோடி) மதிப்பில் எண்ம பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவா்த்தனைகளைவிட மிக அதிகம்.

அரசு நிதி மூலம் வலுவான எண்ம தளத்தை உருவாக்கி, அதில் அனைவரும் இணையும் அணுகுமுறையைப் பின்பற்ற இந்தியா முடிவு செய்தது. இது நிறுவனங்களின் ஏகபோக உரிமையைக் குறைக்கிறது; ஒட்டுமொத்த எண்ம பயன்களை ஜனநாயகப்படுத்துகிறது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த அணுகுமுறை, நீண்ட கால அடிப்படையில் மிகவும் நிலையான அணுகுமுறையாகும் என்றாா் அவா்.

ஐஃபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்: பியூஷ் கோயல்

பி20 கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘தனது பெரும்பாலான புதிய மாடல் ஐஃபோன்களை இந்தியாவிலிருந்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த ஐஃபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

தனது மொத்த ஐஃபோன் தயாரிப்பில் 5 முதல் 7 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகிறது. இதனை 25 சதவீதம் வரை அதிகரிக்க அந்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது’ என்றாா்.

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com