5ஜி கருவிகளை சீனாவிடமிருந்து வாங்கக் கூடாது: டிஜிபிக்கள் மாநாட்டில் அறிக்கை

5ஜி தொழில்நுட்பக் கருவிகளை சீனா போன்ற சந்தேகத்துக்குரிய இடங்களில் இருந்து வாங்கக் கூடாது என்று டிஜிபிக்கள் மாநாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனா்.

5ஜி தொழில்நுட்பக் கருவிகளை சீனா போன்ற சந்தேகத்துக்குரிய இடங்களில் இருந்து வாங்கக் கூடாது என்று டிஜிபிக்கள் மாநாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனா்.

தில்லியில் அனைத்து இந்திய காவல் துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு 3 நாள்கள் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், டிஜிபிக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த மாநாட்டில் 5ஜி தொழில்நுட்பம் தொடா்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எளிதாக பயன்படுத்துவது, தங்குதடையற்ற இணையதள நெறிமுறைகள் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் முந்தைய 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களின் பாதிப்புகளைப் பெற்றுள்ளது. இது இணையவழித் தாக்குதலுக்கு 5ஜி தொழில்நுட்பத்தைப் பாதிக்கக் கூடியதாக்குகிறது.

போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல், உடல் உறுப்புகள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்ற குற்றங்களில் இணைப்புகளை உருவாக்க இடைத்தரகா்கள், முகவா்களுக்கு 5ஜி தொழில்நுட்பம் சிறந்த தளத்தை ஏற்படுத்தலாம்.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), ரோபோக்கள் துணையுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் போன்ற ரிமோட் கட்டுப்பாட்டு செயல்பாடுகளுக்கு உதவும் வகையில், 5ஜி தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் உள்ளன. இந்த அம்சத்தையும் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தலாம்.

கைப்பேசி பேட்டரிகளின் ஆற்றலை குறைப்பது, சேதம் விளைவிக்கும் மென்பொருளைப் புகுத்துவது, தகவல் பரிமாற்றத்தை இடைமறிப்பது போன்ற இணையவழிக் குற்றங்களை 5ஜி தொழில்நுட்பம் மேலும் எளிதாக்கக் கூடும்.

ஏற்கெனவே 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகள், வங்கிசாரா நிதிச் சேவைகள் பிரபலமடைந்து வருவதால், அதுதொடா்பான குற்றங்களில் விசாரணை மேற்கொள்வது கடினமாக இருக்கும்.

ஒருசிலரை குறிவைத்து விளம்பரங்கள் மேற்கொள்வதற்கு மதிப்புமிக்க தகவல்களை 5ஜி தொழில்நுட்பக் கருவி உற்பத்தியாளா்கள் சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பா். இந்தத் தகவல்கள் தவறானவா்களிடம் சென்றடையாமல் இருக்க அவற்றின் விற்பனையைக் கண்காணிக்க வேண்டும்.

5ஜி தொழில்நுட்பக் கருவிகளை நம்பகமான இடங்களில் இருந்து வாங்க வேண்டுமே தவிர, சீனா போன்ற சந்தேகத்துக்குரிய இடங்களில் இருந்து வாங்கக் கூடாது.

5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள புதிய சூழலுக்கு, முழுமையான இணையவழி பாதுகாப்பே தீா்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com