திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தற்சார்பு இந்தியா நமது இலக்கு: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சார்பு சக்தியாக மாற வேண்டும் என குடியரசு தலைவர் திரெபதி முர்மு தெரிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2023, 9:57 pm

DIN

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சார்பு சக்தியாக மாற வேண்டும் என குடியரசு தலைவர் திரெüபதி முர்மு தெரிவித்தார்.
 மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு உரையாற்றினார். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
 தனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை:
 நாட்டின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நிலையான முறையில் அச்சம் ஏதுமின்றி தீர்க்கமான இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
 துல்லிய தாக்குதல் முதல் பயங்கரவாதத் தடுப்பு வரையிலும், பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் முத்தலாக் தடை வரையிலும் மத்திய அரசு தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
 ஏழை மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமூகநீதியின் மிகப்பெரிய எதிரி ஊழல். கடந்த சில ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களில் ஊழல் களையப்பட்டுள்ளது.
 துரித வேகத்தில்...: கடந்த 9 ஆண்டுகளில் பாகுபாடு ஏதுமின்றி அனைத்து சமூகத்தினருக்காகவும் அரசு செயல்படுகிறது. பல்வேறு அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளன. விரைவான வளர்ச்சிக்காகவும், தொலைநோக்கு திட்டங்களுக்காகவும் இந்தியா தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி துரித வேகத்தில் மக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் சந்தித்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்க அரசு உறுதி கொண்டுள்ளது.
 திருவள்ளுவர் வழியில்...: விண்வெளித் துறையில் பெரும் சக்தியாக மட்டுமின்றி புத்தாக்கத்தின் மையமாகவும் இந்தியா முன்னேறியுள்ளது. திருவள்ளுவர், சங்கராச்சாரியார், குரு நானக் உள்ளிட்ட துறவிகள் காட்டிய வழியில் நாடு பயணித்து வருகிறது.
 நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சார்பு சக்தியாக மாற வேண்டும். கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
 ஏழ்மையற்ற, செழுமைமிக்க நடுத்தர வகுப்பினரைக் கொண்ட, பெண்கள், இளைஞர்களால் வழிநடத்தப்படும் நாடாக 2047-ஆம் ஆண்டில் இந்தியா மாற வேண்டும்.
 முன்பு தனது பிரச்னைகளுக்குத் தீர்வு காண மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருந்த நிலையில், தற்போது உலகப் பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு கண்டு வருகிறது.
 ஒப்பிட இயலாத செயல்பாடு: முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் எந்த அரசுடனும் ஒப்பிட முடியாத வகையிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது.
 நாட்டில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.
 உலக நாடுகள் பாராட்டு: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலகம் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காண முயலும். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
 தினம் இரு கல்லூரிகள்: ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.80,000 கோடி மதிப்பில் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 9,000 மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதன்மூலம் ரூ.20,000 கோடியை ஏழை மக்கள் சேமித்துள்ளனர்.
 கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரு கல்லூரிகளும், வாரம் ஒரு பல்கலைக்கழகமும், மாதம் ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது என்றார் திரெüபதி முர்மு.
 முன்னேற்றங்கள் குறித்த ஆழமான பார்வை: பிரதமர்
 குடியரசுத் தலைவரின் உரை குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தது. பல துறைகளில் புகுத்தப்பட்ட புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த ஆழமான பார்வையை அவரின் உரை வெளிப்படுத்தியது.
 சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்' எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.