ட்விட்டருக்கு சவால்விடும் திரெட்ஸ்! எப்படி இணைவது? என்ன பயன்? பிளஸ், மைனஸ்!

ட்விட்டருக்கு மாற்றாக பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 'திரெட்ஸ்' என்ற செயலியை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ட்விட்டருக்கு சவால்விடும் திரெட்ஸ்!  எப்படி இணைவது? என்ன பயன்? பிளஸ், மைனஸ்!
Published on
Updated on
3 min read

ட்விட்டருக்கு மாற்றாக பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 'திரெட்ஸ்' என்ற செயலியை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலர் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) கொடுத்து கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கினார். அதுமுதலே ட்விட்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 

ட்விட்டர் பணியாளா்கள் நீக்கம், பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம், பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நீக்கம், ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் பெற கட்டணம், எலான் மஸ்க்கின் பல்வேறு கருத்துகள், ட்வீட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு... ஏன் ட்விட்டர் லோகோவை மாற்றியது கூட பயனர்களிடையே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. 

மேலும், பாதுகாப்பை மீறி 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை திருடப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் இது ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பயனர்களைக்கூட பாதித்தது என்று சொல்லலாம். 

இந்நிலையில்தான் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை நேற்று(ஜூலை 6) அறிமுகம் செய்துள்ளது.

திரெட்ஸ் என்பது என்ன? 

இன்ஸ்டாகிராம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் இணைந்திருக்கிறார்கள். இதில் புகைப்படங்கள், விடியோக்களை பதிவிட முடியும். மேலும் தனி நபருடன் சாட் செய்யலாம். பிரபலங்கள் பலரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதுபோலவே திரெட்ஸும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

திரெட்ஸ் என்பது ட்விட்டரைப் போல கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிட, இணைப்புகளை(links) பகிர, புகைப்படங்கள், விடியோக்களை பதிவிட வசதி உள்ளது. 

திரெட்ஸில் கருத்துகளாக 500 எழுத்துகள் வரை பதிவிடலாம், அதிகபட்சம் 10 புகைப்படங்களும், 5 நிமிடம் வரை விடியோக்களையும் திரெட்ஸில் பதிவு செய்ய முடியும். 

உங்களின் பதிவுகளை மற்றொருவர் லைக், ஷேர், கமெண்ட் செய்ய முடியும், மேலும் பிற நபர்களின் கணக்குகளை பின்தொடரலாம். 

தமிழ் எழுத்தான 'கு' வடிவில் இதன் லோகோ அமைந்துள்ளது. 

திரெட்ஸ் செயலி அறிமுகமான ஒருநாளில் இதுவரை 5.5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

எப்படி பெறுவது? 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பயன்படுத்தும் வகையில் 100 நாடுகளில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால் அதன் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி திரெட்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை இதிலும் பெற முடியும். 

சிக்கல்கள்

இன்ஸ்டாகிராமும் திரெட்ஸும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால் மட்டுமே திரெட்ஸில் கணக்கு தொடங்க முடியும், திரெட்ஸ் கணக்கை நீக்கினால் இன்ஸ்டாகிராம் கணக்கும் நீங்கி விடும். 

மேலும், திரெட்ஸில் ஹேஷ்டேக் அல்லது ட்ரெண்டிங் பிரிவு ஏதும் இல்லை. ட்விட்டரைப் போலவே திரெட்ஸில் பதிவிட்ட பிறகு எடிட் செய்ய முடியாது, மாறாக பதிவை நீக்க மட்டுமே முடியும்.

திரெட்ஸ் செயலி பயன்படுத்துவதால் பல தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தனி நபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் கடுமையாக உள்ள ஐரோப்பிய யூனியனில் இந்த செயலி அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டருக்கு சவாலாக இருக்குமா?

உலகம் முழுவதும் தற்போது ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை 35 கோடி. இன்ஸ்டாகிராமில் 160 கோடி பேர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

பயனர்களை கணக்கிடுகையில் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் பயனர்கள் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம். இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவருமே திரெட்ஸ் கணக்கிலும் இருப்பார்கள் என்பதால் திரெட்ஸ் வரும் நாள்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

ஆனால், பயனைப் பொருத்தவரையில் இன்ஸ்டாகிராம் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கப்படுகிறது. தற்போது திரெட்ஸிலும் அந்த பிம்பமே தெரிகிறது. அதன் நிறம், வடிவம் எல்லாம் இன்ஸ்டாகிராமை பிரதிபலிக்கிறது. ஆனால், ட்விட்டர் என்பது அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அதில் இருக்கின்றனர். முக்கிய அறிவிப்புகள், செய்திகள் அனைத்தும் ட்விட்டரிலேயே கிடைக்கப்பெறுகிறது. இதனால் முக்கிய பிரமுகர்கள் ட்விட்டரை அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயன்பாட்டில் திரெட்ஸ், ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். 

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சமூக வலைத்தளங்களுடன் இப்போது திரெட்ஸும் இணைந்துள்ளது. வரும் நாள்களில் திரெட்ஸில் பயனர்களின் தேவைக்கேற்ப மேலும் பல வசதிகள் கொண்டுவரப்படலாம். ஆனால் சாதாரண மக்களிடையே, ட்விட்டரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழலில் ‘திரெட்ஸ்’ செயலி வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ட்விட்டரின் காலத்தில் அதனுடன் போட்டியிடும் வகையில் அவ்வப்போது உலகில் ஆங்காங்கே இதேபாணி செயலிகள் தோன்றியபோதிலும் அவற்றில் எதுவும் பெரும் சவாலாக மாறவில்லை. திரெட்ஸை முன்னிறுத்துவது வலுவான மெடா நிறுவனம் என்பதால் இதன் மீது உலகின் கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. காலமும் பயனர்களும்தான் தீர்மானிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com