பிரதமராக பொறுப்பேற்பவர் மனைவியுடன் இருக்க வேண்டும்: லாலு

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவி இல்லாமல் வசிப்பது தவறு என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்


புது தில்லி: எதிர்காலத்தில் யார் பிரதமராக பொறுப்பேற்றாலும், அவர்கள் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவி இல்லாமல் வசிப்பது தவறு என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைகளுக்காக புது தில்லியில் தங்கியிருக்கும் லாலு பிரசாத், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை அகற்றும் வகையில், 17 எதிர்க்கட்சித் தலைவர்களும் பெங்களூருவில் ஒன்றுகூடுவார்கள் என்று கூறினார். அப்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்தியிருந்த லாலு பிரசாத் யாதவ், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவி இல்லாமல் தங்கியிருப்பது தவறு. இந்த தவறு ஒழிக்கப்பட வேண்டும் என்று பதிலளித்தார்.

சரத் பவாருக்கு வயதாகிவிட்டதால், அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்று அஜீத் பவார் வலியுறுத்தியிருப்பது குறித்து லாலுவிடம் கேள்வி எழுப்பியதற்கு, அஜீத் பவார் வலியுறுத்தியதற்காக, சரத் பவார் ஏன் அரசியலிலிருந்து விலக வேண்டும்? வயதான எவரேனும் அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார்களா என்ன? எவர் ஒருவரும் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதே இல்லை என்றும் பதிலளித்தார்.

முன்னதாக, ஜூன் மாதம் 26ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் பேசுகையில், ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில்தான், புது தில்லியில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த லாலு, திருமணமாகாத அல்லது குடும்பத்துடன் வசிப்பவர்தான் பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பதும், அதேநேரத்தில், ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com