நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவுமில்லை: சரத் பவார்

'நான் சோர்வாகவில்லை, இன்னும் ஓய்வு பெறவில்லை' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

'நான் சோர்வாகவில்லை, இன்னும் ஓய்வு பெறவில்லை' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளித்ததுடன், மகாராஷ்டிரத்தின் 2-வது துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். 

அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் அஜித் பவாருக்கும் இடையே தற்போது கடும் மோதல் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக சரத் பவார் தனது கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அஜித் பவார் கூறியிருந்தார். 'ஐஏஎஸ் அலுவலர்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள், ஏன் அரசியலில் பாஜகவில் கூட 75 வயதில் தலைவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்' என்று கூறினார். 

இதற்குப் பதில் அளித்துள்ள சரத் பவார், 'நான் சோர்வாகவில்லை, நான் ஓய்வு பெறவில்லை, நான் நெருப்பு' என்று வாஜ்பேயியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, கட்சியின் பொறுப்புகளை அத்வானியிடம் வழங்கியபோது இந்த வார்த்தைகளைக் கூறினார். 

மேலும் சரத் பவார், ' என்னை ஓய்வுபெறச் சொல்வதற்கு அவர்கள் யார்? நானும் இன்னும் உழைப்பேன்.

மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார் என்று தெரியுமா? எனக்கு பிரதமர் பதவியோ, அமைச்சர் பதவியோ தேவையில்லை, நான் மக்களுக்காக உழைப்பேன். 

கட்சிக்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் அனைவரும் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள்' என்றார். 

அடுத்து, கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் சுப்ரியா சுலேவுக்கு வழங்கியதாக பிரபுல் படேல் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், 'கட்சித் தொண்டர்கள் அனைவரும் சுப்ரியா சுலேதான் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தா பிரபுல் படேல் தோல்வியைத் தழுவினார். எனினும் அவருக்கு மாநிலங்களவையில் பதவி வழங்கப்பட்டது' என்றார். 

சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com