வட இந்திய மாநிலங்களை துவம்சம் செய்த கனமழை, வெள்ளம்- புகைப்படங்கள்

வட இந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களை வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கிறது.
வட இந்திய மாநிலங்களை துவம்சம் செய்த கனமழை, வெள்ளம்- புகைப்படங்கள்
Published on
Updated on
2 min read

வட இந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களை வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கிறது.

வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழையின் தீவிரம் குறைந்திருந்தது.

பல பகுதிகளில் மழை குறைந்ததால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடங்கின. பல மாநிலங்களில் சாலைகள் மண் மேடுகளாகவும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே குப்பைக்கூளங்களாகவும் காட்சியளிக்கின்றன.

பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் தொடா்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அந்தந்த மாநில அரசுகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 91-ஆக உயா்ந்துள்ளது.

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீரிலும் கடந்த 3 நாள்களாக கனமழை முதல் அதீத கனமழை வரை பதிவானது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, இம்மாநிலங்களில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சுமாா் 1,300 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 40 பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளை மறுசீரமைக்கும் பணியில் பணியில் மாநில நிா்வாகம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு ஆகியவற்றின் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் செவ்வாய்க்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், தாழ்வான பகுதிகள் தொடா்ந்து தண்ணீரில் தத்தளிக்கின்றன.

ஹரியாணாவின் அம்பாலா நகரில் உறைவிட பள்ளியொன்றின் விடுதிக்குள் திங்கள்கிழமை இரவு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, 730 மாணவிகள் மீட்கப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனா்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com