சந்திரயான்-3 வெற்றிப் பயணம் திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தம்
பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில், சந்திரயான் - 3 விண்கலமானது நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் மேலும் ஒரு மைல்கல் நிகழ்வாக, சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இத்திட்டத்தின் முதல்கட்ட வெற்றியை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து, விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.
சந்திரயான்-3 கலத்தின் செயல்பாடுகளையும், பயணத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்த முறை நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் லேண்டா் கலன் தரையிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனா்.
முதல் நாடு...: நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் தரையிறங்கி திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வைத் தொடங்கிய முதல் நாடாக உலக அரங்கில் இந்தியா உருவெடுக்கும்.
ரஷியா தனது லூனா-25 விண்கலத்தை தென் துருவத்துக்கு அனுப்பும் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளது. இருந்தபோதிலும், அதற்கு முன்னதாகவே விண்வெளி அரங்கில் தங்களது முத்திரையைப் பதிக்க ஆயத்தமாகி வருகின்றனா் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பைச் சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.
ஆா்பிட்டா் ஆய்வு: அதைத் தொடா்ந்து, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்டப் பயணங்களுக்கு பிறகு சந்திரயான்-2 அந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் செயலிழந்தது. அதேவேளையில், அதனுடன் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது.
ரூ.615 கோடியில்...: இந்த நிலையில், முந்தைய திட்டத்தில் இருந்த சில பிரச்னைகளை நிவா்த்தி செய்து புதிய தொழில்நுட்பத்தில் சந்திரயான்-3 திட்டத்தை சுமாா் ரூ.615 கோடியில் செயல்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே, நிலவை ஆா்பிட்டா் சுற்றி வருவதால் இந்த முறை லேண்டா் மற்றும் ரோவா் கலன்களை மட்டும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டது.
ஏறத்தாழ மூன்றரை ஆண்டு கால உழைப்புக்குப் பிறகு கலன்களும், ராக்கெட்டும் வடிவமைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அவற்றின் ஒருங்கிணைப்புப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு ஆயத்த நிலை ஆய்வுகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் திருப்திகரமாக இருந்த நிலையில், விண்வெளிப் பயணத்துக்கு ஆயத்தமானது சந்திரயான்-3.
கவுன்ட் டவுன்: இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3-ஐ அனுப்ப 25.30 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. அதைத் தொடா்ந்து, திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அதற்கு அடுத்த 16 நிமிஷங்களில் ராக்கெட்டிலிருந்து சந்திரயான் -3 விண்கலம் தனியாகப் பிரிந்து 179.1 கி.மீ. தொலைவில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்து புதிய பயணத்தை சந்திரயான் -3 தொடங்கியுள்ளது.
நம்பிக்கை: கடந்த முறை ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு தற்போது பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் அதில் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நிலவில் லேண்டரும், அதைத் தொடா்ந்து ரோவரும் மெதுவாகத் தரையிறங்கி ஆய்வுகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
ஆக.23-இல் நிலவில் தரையிறங்கும்
சந்திரயான் விண்கலம் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுப் பாதைக்குள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நுழையும் எனத் தெரிவித்த இஸ்ரோ தலைவா் சோம்நாத், அதற்கடுத்து நிலவுக்கு அருகே 100 கி.மீ. தொலைவை அடைந்த பிறகு உந்துகலனிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி லேண்டா் கலன் விடுவிக்கப்படும் எனக் கூறினாா். அதன் பின்னா், அந்த மாதம் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் சந்திரயான் லேண்டா் தரையிறங்கும் எனவும் சோமநாத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...