சிறையில் மலர்ந்த காதல்! பரோலில் திருமணம் செய்துகொண்ட கொலைக் குற்றவாளிகள்!

தனித்தனியாக பரோலில் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு தம்பதியாக மீண்டும் சிறைக்குத் திரும்பினர்.
சிறையில் மலர்ந்த காதல்! பரோலில் திருமணம் செய்துகொண்ட கொலைக் குற்றவாளிகள்!

மேற்கு வங்கத்தில் கொலைக்குற்றவாளிகள் இருவருக்கு சிறையில் மலர்ந்த காதல், திருமணத்தில் முடிந்தது. 

அவர்கள் இருவரும் தனித்தனியாக பரோலில் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு தம்பதியாக மீண்டும் சிறைக்குத் திரும்பினர்.

மேற்கு வங்க மாநிலம் பர்தாமான் மாவட்டத்திலுள்ள சிறையில் சஹானாரா காதுன் என்ற பெண் கொலைக்குற்றத்திற்காக சிறைதண்டனை பெற்று வருபவர். கடந்த 6 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். 

இதேபோன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹாசிம் என்பவர், கொலைக்குற்றத்திற்காக அதே சிறையில் 8 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 

இதனிடையே இவர்கள் இருவருக்கும் சிறையில் காதல் மலர்ந்துள்ளது. சிறையில் அவர்களைக் காண இருவரின் குடும்பத்தினரும் அவ்வபோது வந்துசெல்வது வழக்கம். ஒருநாள் இருவரின் பெற்றோரும் ஒரே நாளில் இருவரைக் காண வந்துள்ளனர். 

அந்த நாளிலிருந்து இருவரும் அறிமுகமாகியுள்ளனர். அதிலிருந்து இருவரிடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து இருவரும் 5 நாள்கள் பரோலில் வெளியே வந்து, குடும்பத்தாரின் சம்பதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கிழக்கு பர்தாமானிலுள்ள குசும்கிராம் பகுதியில் இஸ்லாம் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பரோல் முடிந்து இருவரும் தம்பதியாக சிறைக்குத் திரும்பினர். 

இது தொடர்பாக பேசிய மணமகன் அப்துல் ஹாசிம், இருவரும் பர்தாமான் சிறையில் உள்ளோம். எங்கள் வீட்டினரின் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். இருள் சூழ்ந்த நாள்களைக் கடந்து எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நாங்கள் வாழ விரும்புகிறோம். இனி மீண்டும் இதுபோன்ற பெரும் துயரங்களை அனுபவிக்கமாட்டோம் என்றார்.

திருமணம் குறித்து பேசிய மணப்பெண் சஹானாரா காதுன், சிறை தண்டனை முடிந்து வெளியே சென்றதும் மற்ற பெண்களைப் போன்று நானும் என் குடும்பத்தைத் தொடங்குவேன் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com