

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நடந்துள்ள கொடுமை அதற்கும் மேல் துரதிருஷ்டவசமானது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு பொறுப்பேற்று குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மணிப்பூரில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது அதைவிட துரதிருஷ்டவசமானது. அந்த சம்பவம் கவலையளிக்கிறது என்றார்.
இதையும் படிக்க: மணிப்பூரில் குற்றவாளிகளின் வீடுகளை தீ வைத்து எரித்த பெண்கள்!
மேற்குவங்க மாநிலத்தின் பாஜக தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் விடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் சந்தைப் பகுதியில் பெண்களால் கடுமையாக தாக்கப்படுகின்றனர். அவர்களது ஆடைகளைக் களைந்து பெண்கள் தாக்குகின்றனர். இந்த விடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விடியோவை பகிர்ந்து அவர் பதிவிட்டிருப்பதாவது: சில நாள்களுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தின் மால்டா பகுதியில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அவர்கள் மீது இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை காவல் துறையினர் தடுக்கவில்லை. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் சசி பஞ்சா கூறியதாவது: மால்டா சம்பவத்தில் அரசியலாக்குவதற்கான தேவையே இல்லை. மேற்கு வங்கத்தில் நடந்துள்ள சம்பவம் திருட்டு தொடர்பானது. சந்தையில் இருந்து இரண்டு பெண்கள் திருட முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டு சந்தையில் இருந்த பெண்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்களைத் தாக்கியுள்ளனர். இருப்பினும், காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய அவசியமில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நாங்களாகவே முன் வந்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.