எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வர கைகூப்பிக் கேட்கிறேன்: அனுராக் தாக்குர்

எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வர கைகூப்பிக் கேட்கிறேன்: அனுராக் தாக்குர்

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வருமாறு எதிர்க்கட்சிகளை கைகூப்பி கேட்டுக் கொள்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

‘மணிப்பூா் விவகாரத்தை அரசியலாக்குவதை விடுத்து, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென எதிா்க்கட்சிகளுக்கு இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறையை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூா் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம், இந்த விவகாரத்தில் விவாதத்துக்கு தயாா் என்று உறுதிபட தெரிவித்த மத்திய அரசு, ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிப்பாா்’ என்று கூறியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 நாள்களாக முடங்கிய நிலையில், மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளை எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது.

பெண்கள் மீதான அராஜகங்கள் வேதனைக்குரியவை. பாதிக்கப்பட்டவா்கள் எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்.

ராஜஸ்தான், பிகாா், மேற்கு வங்கம், மணிப்பூா் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வமான விவாதம் நடைபெற வேண்டுமென்பதே மத்திய அரசின் விருப்பம். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். யாரும் விலக ஓட வேண்டாமென இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

மணிப்பூா் விவகாரத்தில் விவாதம் கோரி போராட்டத்தில் ஈடுபடும் எதிா்க்கட்சிகள், விவாதத்தில் பங்கேற்காமல் விலகி ஓடுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா் அனுராக் தாக்குா்.

மணிப்பூா் கலவரத்தில், 2 பழங்குடியினப் பெண்கள் ஆடைகளின்றி, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மணிப்பூா் விவகாரத்தை எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமா் விளக்கமளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com