இந்த ஊர் பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்களாம்..

நாட்டில் ஒரு ஊரைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்கள் என பெயர் எடுத்திருக்கிறார்கள்.
இந்த ஊர் பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்களாம்..

சாலை என்று வந்துவிட்டால், அவசர அல்லது நிலையற்ற முடிவு எடுப்பதில் வல்லவர்களான பெண்கள் மோசமான ஓட்டுநர்களாகக் கருதப்பட்டு வந்த நிலையில், நாட்டில் ஒரு ஊரைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்கள் என பெயர் எடுத்திருக்கிறார்கள்.

கேரளத்தில் நடந்த சாலை விபத்துகள் என்ற ஆராய்ச்சி முடிவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்ட இந்த தரவுகளின் அடிப்படையில், மாநிலத்திலேயே எர்ணாகுளம்தான் அதிக விபத்துகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 

அது மட்டுமல்ல, மாநிலத்திலேயே எர்ணாகுளத்தில்தான் அதிக பெண் ஓட்டுநர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. (பிறகென்ன விபத்தில் எர்ணாகுளம் முதலிடத்தில் வந்திருப்பது ஆச்சரியமேயில்லை என்று அவசரமாக சொல்லிவிட வேண்டாம்)

இந்த ஆய்வின் அடிப்படையில், கடந்த 2018 - 2022ஆம் ஆண்டு நடந்த விபத்துகள் மற்றும், விபத்துக்குக் காரணமாக வாகனங்களை இயக்கியவர்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டது. அதில், பெண் ஓட்டுநர்களை விடவும், ஆண் ஓட்டுநர்களே அதிக விபத்துகளை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பெண்களை விட 13 மடங்கு அதிகமாக ஆண்கள் விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எண்களில் சொல்ல வேண்டும் என்றால், எர்ணாகுளம் மாவட்டத்தில் 2018 - 2022ஆம் ஆண்டுகளில் 56,000 ஆண்களும், 4,379 பெண்களும், 5 திருநர்களும் சாலை விபத்தை சந்தித்திருக்கிறார்கள்.

பொதுவாக விபத்துகளுக்கான காரணிகளில், பெண் மற்றும் ஆண் ஓட்டுநர்களுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கும். ஆண் ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும்போது பெரும்பாலும் அது அதிக வேகமே காரணியாக அமையும். பொதுவாக பெண் ஓட்டுநர்கள் மெதுவாகவும், மிகவும் எச்சரிக்கையாகவே ஒரு வாகனத்தைக் கடந்து செல்வார்கள். ஆண் ஓட்டுநர்கள் மிகவும் அபாயகரமான வளைவுகளைக் கடப்பது, வேகமாக மற்றவர்களை அச்சுறுத்துவதுபோல வாகனத்தை இயக்குவது, குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவது போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.

இத்தனை காரணங்களை அலசி ஆராய்ந்தாலும், எர்ணாகுளம் மாவட்டத்தில், பெண்களை விடவும், ஆண்களே அதிக விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இதேக்காலக்கட்டத்தில் 18 வயதுக்குக் குறைவான 150 பேர் இந்த மாவட்டத்தில் சாலை விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள். 60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களில் 3,030 பேர் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் 56 பேர் பெண் ஓட்டுநர்கள்.

26 - 35 வயதுடைய (1,254 வழக்கு) பெண்களே அதிகளவில் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதற்குடுத்து 36 - 45 (1,282 வழக்கு) உள்ளது. கேரளத்தில் இந்தக் காலக்கட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நடந்தது எர்ணாகுளத்தில்தான். இங்கு மட்டும் ஒட்டுமொத்த சாலை விபத்தில் 14 சதவிகிதம் நிகழ்ந்துள்ளது. திருவனந்தபுரம் 12.69 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எனவே, இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்கள்.

விபத்துகளைத் தவிர்க்க..
வாகனங்களை நன்கு பராமரிக்க வேண்டும். பிரேக், விளக்குகள், டயர் அனைத்தையும் நல்ல முறையில் பராமரிப்பது விபத்துகளை தவிர்க்கும்.
பாதுகாப்பு வழிமுறைகளான சீட் பெல்ட், தலைக்கவசம் போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com