சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் நிகழாண்டு ஜூலை வரை தமிழகத்தின் பங்காக ரூ.12, 625.39 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை எனவும் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த 2022-2023 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வசூலின் மொத்தப் பகிர்வு; இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பகிர்வின் நிலுவைத் தொகை; நிகழ் நிதியாண்டில் சிறப்பாக ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு அதிகப் பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படுமா? போன்ற கேள்விகளை மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.சண்முகம், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில்: மத்திய ஜிஎஸ்டி வசூல் நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் (சிஎஃப்ஐ) வரவு வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநில ஜிஎஸ்டியை அந்தந்த மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்படுகிறது. இந்திய ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள மத்திய ஜிஎஸ்டி ஒரு பகுதி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
2022-23 நிதியாண்டில் இத்தகைய மத்திய ஜிஎஸ்டி பகிர்வாக மொத்தத் தொகை ரூ. 2,68,334.19 கோடி மாநிலங்களுக்கு 14 தவணைகளில் விடுவிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை.
நிகழ் 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.10.21 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்த நிதியாண்டில் ஜூலை மாதம் வரை இயல்பான தொகையைவிட இருமடங்காக மாநிலங்களுக்கு ரூ.3,09,521.22 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழகம் ரூ. 12,625.39 கோடியை பெற்றது.
ஜூலை வரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் முறையே ரூ. 962.32 கோடி, ரூ.962.32 கோடி, ஜூன் ரூ. 1924.64 கோடி வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் தனது பதிலில் பட்டியலிட்டுள்ளார். மீதித் தொகை வழங்கப்பட்ட விவரம் குறித்து பதிலில் தெரிவிக்கவில்லை.
அதே சமயத்தில் கடந்த 2023 ஜூன் மாதத்தின் இயல்பான தவணை நிலுவையோடு கூடுதலாக ஒரு தவணை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.
மூலதனச் செலவை விரைவுபடுத்த இயல்பான மாதாந்திர நிதிப்பகிர்வு ரூ.59,140 கோடி என்பதற்குப் பதிலாக, மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வின் 3-ஆவது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு ஜூன் 12-ஆம் தேதி விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.4825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக நிதி விடுவிக்கப்படுவதில் மத்திய அரசு தணிக்கை அதிகாரிகளின் பயன்பாட்டு சான்றிதழின் அடிப்படையில் நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.
சில உதவித் திட்டங்களுக்கு சான்றிதழ் கிடைக்காதபட்சத்திலும் மத்திய அரசுக்கு ஏற்புடையது இல்லாத நிலையிலும் மத்திய மாநில அரசுகளுக்கிடையே பிரச்னை தொடருவதும் குறிப்பிடத்தக்கது.