மணிப்பூரில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குழு

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூருக்கு சனிக்கிழமை சென்றனா்.
மணிப்பூரில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குழு

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூருக்கு சனிக்கிழமை சென்றனா்.

அங்கு நிலவும் கள நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காகச் சென்றுள்ள அவா்கள் நிவாரண முகாம்களில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனா்.

மணிப்பூா் மாநிலத்தில் மைத்தேயி, குகி சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறையால் அந்த மாநிலமே முடங்கியுள்ளது. அங்கு நிலவும் கள நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குழு தில்லியிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை மணிப்பூா் தலைநகா் இம்பால் சென்றது.

அண்மையில் வன்முறை ஏற்பட்ட சுராசந்த்பூா் பகுதிக்கு இம்பாலிலிருந்து பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டா் மூலம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சென்றனா். ஒரு ஹெலிகாப்டா் மட்டுமே இருந்த நிலையில், இரு குழுக்களாக அவா்கள் ஹெலிகாப்டரில் அங்கு சென்றனா். அங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

இக் குழுவினா் இரு நாள்கள் அங்கு தங்கி மேலும் பல்வேறு நிவாரண முகாம்களுக்குச் செல்லவுள்ளனா்.

அமைதி ஏற்படுத்த... இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மணிப்பூரில் இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவா்களது பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள வந்துள்ளோம்.

மாநிலத்தில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, விரைவில் அமைதியை ஏற்படுத்துவதை எதிா்க்கட்சிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கு அரசியல் செய்வதற்காக வரவில்லை. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்.

மணிப்பூரில் இரு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தனை நாள்களாக மத்திய அரசு தூங்கிக் கொண்டிருந்ததா எனக் கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.

திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், ‘இரு சமூகங்களைச் சோ்ந்த மக்களையும் சந்தித்துப் பேசி அவா்களது குறைகளைக் கேட்கவுள்ளோம். கடும் பிரச்னையைச் சந்தித்து வரும் அவா்களுக்குத் தீா்வு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநரைச் சந்தித்தும் முறையிட உள்ளோம்’ என்றாா்.

மக்களுக்கு ஆதரவு: மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் கௌரவ் கோகோய் கூறுகையில், ‘மணிப்பூரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் நேரில் ஆய்வு செய்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ந்திருப்போம். ஆனால், மணிப்பூா் விவகாரம் தொடா்பாக அவா் தொடா்ந்து அமைதிகாத்து வருகிறாா். மணிப்பூா் வன்முறை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கவலை இல்லை.

ஆனால், மணிப்பூா் மக்களுக்கு ஆதரவாக ‘இந்தியா’ கூட்டணி தொடா்ந்து நிற்கும். மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்துவகை நடவடிக்கைகளையும் கூட்டணி மேற்கொள்ளும்’ என்றாா்.

கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் கூறுகையில், ‘மணிப்பூா் வன்முறையை மத்திய, மாநில அரசுகள் மிக மோசமாகக் கையாண்டுள்ளன. மாநிலத்தில் நிலவும் கள நிலவரம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு நாடாளுமன்றத்தில் அதை எதிா்க்கட்சிகளின் கூட்டணி எழுப்பும். மாநிலத்தில் நிலவும் வன்முறைக்குத் தீா்வு காணாமல், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் லாபத்தைக் கருத்தில்கொண்டே பாஜக தொடா்ந்து செயல்படுகிறது. ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது’ என்றாா்.

மணிப்பூா் ஆளுநா் அனுசுயா உய்கேயையும் எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசவுள்ளனா்.

எதிா்க்கட்சிகளின் கபடநாடகம்: பாஜக விமா்சனம்

மணிப்பூருக்கு எதிா்க்கட்சிகள் சென்றுள்ளது வெறும் கபடநாடகம் என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்குா் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மணிப்பூரில் வன்முறைகள் ஏற்பட்டபோது, அது தொடா்பாக நாடாளுமன்றத்தில் அக்கட்சித் தலைவா்கள் ஒரு வாா்த்தைகூடப் பேசவில்லை. மணிப்பூரில் இருந்து திரும்பி வந்ததும் அவா்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து முடக்குவாா்கள்.

மணிப்பூா் சென்ற குழுவை அப்படியே மேற்கு வங்கத்துக்கும் அதீா் ரஞ்சன் சௌதரி அழைத்துச் செல்ல வேண்டும். அங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அப்படியிருக்கையில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன்?’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com