இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட மத்திய அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மாநிலங்களவையில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பணிகள் குறித்த விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோஹில் பேசுகையில், "அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மத்திய அரசு அடிபணிந்து வருகிறது. எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட நாட்டின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளின் நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். டிரம்ப் கூறுவது பொய் என்று அவையில் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், உங்களால் அதைச் செய்ய முடியாது.
எங்கிருந்து எண்ணெய் வாங்குவது - ரஷியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ. அது நம் விருப்பம்; நம் நாடுதான் தீர்மானிக்கும்.
மேற்கு ஆசியாவில் போர் காரணமாக, இந்தியர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள்தான் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி ஆட்சியமைந்த பிறகுதான் இந்தியா மீதான மரியாதை உலகளவில் உயர்ந்துள்ளதாக பாஜக உறுப்பினர் சங்கீதா பல்வந்த் கூறினார்.
சங்கீதா பல்வந்த் கருத்துக்கு பதிலளிக்கையில், "உலகளவில் இந்தியாவின் மரியாதை எப்படி உயர்ந்துள்ளது?அப்படியென்றால், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்குகளால் கட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை என் நாட்டு மக்களும் எனது அரசும்தான் தீர்மானிக்கும் என்று முன்னாள் பிரதமர் (இந்திரா காந்தி) சொன்னார். அப்போதுதான், இந்தியாவின் மரியாதை உலகளவில் உயர்ந்தது" என்று கோஹில் கூறினார்.
Summary
Govt letting US interfere in India's affairs: Congress MP Shaktisinh Gohil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









