ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சம்: இடிக்கப்படும் பள்ளிக் கட்டடம்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துள்ள பள்ளிக்கு செல்ல மாணவர்கள் பயந்ததால் அந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணி இன்று (ஜூன் 9) தொடங்கியது.
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சம்: இடிக்கப்படும் பள்ளிக் கட்டடம்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துள்ள பள்ளிக்கு செல்ல மாணவர்கள் பயந்ததால் அந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணி இன்று (ஜூன் 9) தொடங்கியது.

அண்மையில் நடைபெற்ற ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும், சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால் அவர்கள் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்தது. 

இந்த ஒடிசா ரயில் விபத்தில் இறந்த சிலரது உடல்கள் அடையாளம் காணப்படுவதற்காக பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகநாஹா உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. இறந்த உடல்களை வைக்கப்பட்டிருந்த பள்ளி என்பதால் மாணவர்கள் மீண்டும் அந்தப் பள்ளிக்கு செல்வதை நினைத்து பயந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி மேலாண்மைக் குழுவின் மேற்பார்வையில் அந்த பள்ளிக் கட்டடத்தினை இடிக்க முடிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறியதாவது: ஒடிசா ரயில் கோர விபத்தில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக எங்களது பள்ளியில் வைத்திருந்தார்கள். எங்கள் பள்ளி முழுவதும் இறந்தவர்களின் உடல்களால் நிறைந்து காணப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் அச்சுறுத்தும் விதமாக இறந்தவர்களின் உடல்கள் இருந்தன. கிட்டத்தட்ட அனைத்து உடல்களிலும் அவர்களது தலை இல்லை. கை, கால்கள் துண்டாக்கப்பட்டு இருந்தன என்றார். 

மற்றொரு மாணவர் கூறுகையில், எனக்கு பள்ளிக்கு செல்வதற்கு பயமாக உள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் இறந்தவர்களின் உடல் பாகங்கள் அனைத்து இடங்களிலும் சிதறிக் கிடந்தன. என்னுடைய தம்பி மற்றும் தங்கைகளும் பள்ளிக்கு செல்ல பயப்படுகின்றனர் என்றார். 

அந்த பள்ளியில் 567 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  ஜூன் 2-ஆம் தேதியில் ஏற்பட்ட இந்த கோர ரயில் விபத்தால் 288 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து இந்த பள்ளியானது 100 மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com