62 ஆண்டுகளில் முதல்முறை: மும்பை, தில்லியை ஒரே நாளில் தாக்கிய பருவமழை

நாட்டில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், தலைநகர் தில்லி மற்றும் மும்பையில், ஒரே நாளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது.
62 ஆண்டுகளில் முதல்முறை: மும்பை, தில்லியை ஒரே நாளில் தாக்கிய பருவமழை

நாட்டில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், தலைநகர் தில்லி மற்றும் மும்பையில், ஒரே நாளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது.

மும்பையில் பருவமழை 2 வாரங்கள் தாமதமாக தொடங்கிய நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் 2 நாள்கள் முன்பாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் பருவமழை பெய்யத் தொடங்கியிருப்பது அரிதான நிகழ்வு என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு முன்பு, கடந்த 1961ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதிதான், தில்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் பருவமழை தொடங்கியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

வழக்கமாக, பருவமழையானது வடக்கு மற்றும் தில்லியை அடைவதற்கு 16 நாள்கள் முன்னதாக மும்பையில் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை, மிகவும் விநோதமாக வானிலை மாறியிருக்கிறது. கேரளத்தில் பருவமழை பலவீனமடைந்து காணப்படுகிறது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்தது. பல வானிலை நிலையங்களில் 20 மி.மீ. முதல் 60 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 27 முதல் 30 டிகிரி செல்சியாக பதிவாகியிருந்தது.

தில்லியில் ஜூன் 27-இல் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் 30-இல் பருவமழை தொடங்கியது. தில்லியில் இந்த ஆண்டு பருவ மழை இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முதல் தில்லியில் பரவலாக மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் மழை தொடா்ந்தது. இதனால், வெப்பம் குறைந்து நகரத்தில் குளிா்ந்த வானிலை நிலவியது.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 86 மி.மீ. மழை பதிவானது. புறநகா் பகுதியான சான்டா குரூஸில் 176.1 மி.மீ. மழை பதிவானது.

கனமழை காரணமாக, மலாட், அந்தேரி போன்ற புறநகா் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. நகரின் சில சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பையில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திங்கள்கிழமை எப்படி இருக்கும்?
திங்கள்கிழமை (ஜூன் 26) தலைநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com