பிரிஜ் பூஷண் மீதான குற்றப்பத்திரிகை ஜூலை 1-இல் பரிசீலனை

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றப்பத்திரிகையை
பிரிஜ் பூஷண் (கோப்புப் படம்)
பிரிஜ் பூஷண் (கோப்புப் படம்)

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றப்பத்திரிகையை பரிசீலிப்பது குறித்து ஜூலை 1-இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு உள்பட்ட ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் அண்மையில் குற்றம்சாட்டினா். இதுகுறித்து பிரிஜ் பூஷண் மீது தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டது.

இதனிடையே, பிரிஜ்பூஷணுக்கு எதிராக தில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவா் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான தாக்குதல் அல்லது தாக்க முனைவது), 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின்தொடா்தல்), 506 (குற்றரீதியிலான மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் முன்னிலையில் பிரிஜ் பூஷண் மீதான குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது சிறிதுநேரம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, ‘இது விரிவான குற்றப்பத்திரிகை என்பதால், அதனை மேலும் ஆராய வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்டாா். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த அவா், குற்றப்பத்திரிகை பரிசீலனை மீதான உத்தரவு அன்றைய தினம் பிறப்பிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, பிரிஜ் பூஷண் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ரத்து செய்யக் கோரி, தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ராஜிந்தா் சிங் முன்பாக காவல்துறை கடந்த 15-இல் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை போக்ஸோ நீதிமன்றம் ஜூலை 4-இல் பரிசீலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com