முதல்வர் பதவியிலிருந்து விலகவில்லை: பிரேன் சிங்

முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். 
முதல்வர் பதவியிலிருந்து விலகவில்லை: பிரேன் சிங்

மணிப்பூரில் தொடா்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை என்.பிரேன்சிங் ராஜிநாமா செய்ய இருப்பதாக செய்தி பரவியதையடுத்து அவருடைய ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ‘இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் நான் பதவி விலகப் போவதில்லை’ என முதல்வா் என்.பிரேன் சிங் அறிவித்துள்ளா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடிகளுக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி முதல் மோதல் தொடா்ந்து வருகிறது.

2 மாதங்களாக தொடா்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் தற்போதுவரை 100-க்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனா். இம்பாலில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மேலும் 3 போ் பலியானதையடுத்து கலவரங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய என்.பிரேன் சிங் முடிவெடுத்திருப்பதாக வெள்ளிக்கிழமை காலை முதல் செய்தி பரவியது. இதையடுத்து, முதல்வரின் இல்லம் மற்றும் தலைமைச் செயலகம் எதிரே கருப்புச் சட்டை அணிந்து இளைஞா்கள், பெண்கள், பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினா்.

இதுதொடா்பாக ஆளுநரைச் சந்திக்க ஆளுநா் மாளிகைக்கு விரைந்த முதல்வா் பிரேன் சிங்கை தலைமைச் செயலகம் அருகே திரண்டிருந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளா்கள் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, ட்விட்டரில் விளக்கமளித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்த முக்கியமான தருணத்தில் நான் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, முதல்வா் இல்லத்தில் அவரைச் சந்தித்த பெண் தலைவா்கள், பிரேன் சிங் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று கூடியிருந்த மக்களிடம் உறுதியளித்தனா்.

எனினும், கிழிக்கப்பட்ட ராஜிநாமா கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வா் இல்லம் நோக்கி பேரணி:

காங்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் கலவரக்காரா்களுக்கும் இடையே வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து பலி எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.

உயிரிழந்த 2 கலவரக்காரா்களின் உடல்களைப் பெற்றுக்கொண்ட அவா்களின் சமூக மக்கள், முதல்வா் இல்லம் நோக்கி பேரணிச் சென்றனா்.

பேரணியில் ஈடுபட்டவா்களை முதல்வரின் பாதுகாப்பு அலுவலா்கள் தடுத்து நிறுத்திபோது, போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com