ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது: ராகுல் காந்தி
"ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை அதுவல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.


"ஆட்சியில் நிரந்தரமாக இருப்போம் என்று பாஜக நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை அதுவல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பிரிட்டனில் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் லண்டனில் உள்ள சாட்டஹம் ஹவுஸ் சிந்தனையாளர் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியது:
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை பார்த்தால் பெரும்பாலான காலகட்டம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. பாஜக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதற்கு முன்பு நாங்கள் (காங்கிரஸ்) 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம். இந்தியாவில் தாங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போவதாக பாஜக நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை அதுவல்ல.
இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்களை கவனிக்க காங்கிரஸýம் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தவறி விட்டன. நாங்கள் கிராமப்புறங்கள் மீது அதிகம் கவனம் செலுத்தினோம். நகர்ப்புறங்கள் மீது கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். இந்நிலையில், பாஜக ஆட்சியில் இருப்பதாகவும் காங்கிரஸ் மறைந்துவிட்டதாகவும் கூறுவது சரியல்ல.
இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்னை இருப்பதை காங்கிரஸ் தவிர வெளிநாட்டு ஊடகங்களும் சுட்டிக் காட்டி வருகின்றன.
அதற்கு பாஜக தனது வழியில் பதிலளித்து வருகிறது. அதற்கு கலந்துரையாடலில் ஆர்வம் இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் நாட்டில் நடப்பதை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். எனது கைப்பேசியில் பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அவ்வாறு உளவு பார்க்கவில்லை. எனவே நாட்டு நடப்புகள் அனைவருக்கும் தெரியும்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) என்பது ஓர் அடிப்படைவாத, ஃபாசிஸ அமைப்பாகும். நாட்டின் அமைப்புகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டிக்கான தன்மையை அது மாற்றியுள்ளது.
ஆர்எஸ்எஸ் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்கிறீர்கள். அதை ஒரு ரகசிய சங்கம் என்று கூறலாம். முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்பின் பாணியில் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான போட்டியை ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்திவிட்டு பின்னர் ஜனநாயக ரீதியிலான போட்டியை சிதைப்பதே அதன் சிந்தனையாகும்.
நாட்டின் பல்வேறு அமைப்புகளை அவர்கள் எவ்வாறு வெற்றிகரமாக கைப்பற்றினார்கள் என்பது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஊடகம், நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளும் நெருக்கடியிலும் அச்சுறுத்தலிலும் இருப்பதுடன் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ரஷியா-உக்ரைன் மோதலைப் போன்றது இந்திய-சீன உறவாகும். இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் அங்கு சீனர்கள் இல்லை என்று எங்கள் பிரதமர் சொல்கிறார்.
உக்ரைன் நாடு, ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் தோழமை கொண்டிருப்பதை ரஷியர்கள் ஏற்கவில்லை. அந்தத் தோழமையை மாற்றிக் கொள்ளாவிட்டால் உங்கள் பிரதேச ஒருமைப்பாட்டை நாங்கள் மாற்றுவோம் என்று உக்ரைனிடம் ரஷியா கூறுகிறது. எனது நாட்டின் எல்லையிலும் இதே விஷயம்தான் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா நட்புறவு கொண்டிருப்பதற்காக எங்கள் நாட்டை சீனா மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இதை நான் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தெரிவித்தேன். அதை அவர் முற்றிலும் ஏற்க மறுத்துவிட்டார் என்றார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர், இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல்தான் தடையாக உள்ளதா? என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில் "வாரிசு அரசியல் என்பது பிரச்னை அல்ல. அதைத் தாண்டி அமைப்பு ரீதியிலான பிரச்னைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன' என்று தெரிவித்தார்.
இந்திய-பாகிஸ்தான் உறவுகள் குறித்துக் கேட்டதற்கு ராகுல் பதில் அளிக்கையில் "அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவது அவசியம். ஆனால் அது பாகிஸ்தானியர்களின் செயல்பாடுகளைப் பொருத்தது. இந்தியாவில் பயங்கரவாதத்தை பாகிஸ்தானியர்கள் வளர்க்கும்போது அது மிகவும் கடினமானதாக மாறிவிடுகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...