திரிபுராவில் வன்முறை? ஆளுநரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் திரிபுரா எதிர்க்கட்சியினர் மீது பாஜகவினர் வன்முறை நடத்துவதை  எதிர்த்து ஆளுநரை சந்திக்க உள்ளதாக சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி அறிவித்துள்ளார். 
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் திரிபுரா எதிர்க்கட்சியினர் மீது பாஜகவினர் வன்முறை நடத்துவதை  எதிர்த்து ஆளுநரை சந்திக்க உள்ளதாக சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி அறிவித்துள்ளார். 

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 32 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியை தக்க வைத்தது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) ஓரிடத்தில் வென்றது.

சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகள் மீது பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 

திரிபுராவில் 668 இடங்களில் சிபிஐஎம் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், “இதற்கு எதிராக சிபிஐஎம், காங்கிரஸ், சிபிஐ கட்சிகளைக் கொண்ட 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அதில் சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த இளமாறம் கரீம், பிஆர் நடராஜன், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ஏஏ ரஹீம், சிபிஐ கட்சியின் பினோய் விஷ்வம், காங்கிரஸ் கட்சியிலிருந்து தலா ஒரு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். இந்தக் குழு நாளை திரிபுராவிற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மேலும் திரிபுராவின் ஆளுநரை நேரில் சந்தித்து முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com