எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸாவால் உயிருக்கு ஆபத்தா? அறிகுறி என்ன?

நாடு முழுவதும் அண்மைக்காலமாக எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸ் தொற்று பரவி ஏராளமானோர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸாவால் உயிருக்கு ஆபத்தா? அறிகுறி என்ன?


நாடு முழுவதும் அண்மைக்காலமாக எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸ் தொற்று பரவி ஏராளமானோர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸால் கர்நாடகம் மற்றும் ஹரியாணாவில் இரண்டு பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், நாட்டில் தற்போது 90 பேருக்கு எச்3என்2 வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்1என்1 வகை வைரஸ் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்3என்2 வகை வைரஸ் என்பது ஹாங் காங் வைரஸ் என்று அறியப்படுகிறது. இதிலிருந்து குணமடைய சற்று நாள்கள் கூடுதலாக ஆகும் என்பதால் சுகாதாரத் துறை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. காய்ச்சலுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது.

அறிகுறிகள் என்னென்ன?
எச்3என்2 வகை வைரஸ் பாதித்தால் இருமல், குளிர் காய்ச்சல், காய்ச்சல், தும்மல், சளி, மயக்கம், வாந்தி, தொண்டை வலி, உடல் வலி, தசை வலி சிலருக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவோ ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு ஆபத்து?
15 வயதுக்குள்பட்டவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்தான் இது ஆபத்தை ஏற்படுத்தலாம். கர்ப்பிணிகளை இந்த வகை வைரஸ் தாக்கும் ஆபத்து அதிகம். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.

ஆன்டிபயாடிக்குகள் வேண்டாம்..
சுயமாகவே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவக் கழகம் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, மருத்துவர்களால் குறிப்பிட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் தற்போது மருந்து அளவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுயமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் குறிப்பிட்ட காலம் வரை அந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்ற நிலையில், உடல்நிலை ஓரளவுக்கு சுமாரானதும் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால், தேவையில்லாமல் ஆன்டிபயாடிக்குகள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் செயல்படாமல் போய்விடும். அது மட்டுமல்லாமல், ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்போது அதனை செலுத்தினாலும் உடல் அதற்கு ஏற்ப செயல்பட இயலாமல் போய்விடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு அடுத்தபடியாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆா்எஸ்வி வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு வைரஸ் தொற்றுகளும் பருவகாலத்தில் வழக்கமாக பரவும் பாதிப்புதான் என்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

குளிா்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவா்களிடையேயும், குழந்தைகளிடையேயும் தீவிரமாக பரவி வருகிறது.

சென்னையில்..
சென்னையில் காய்ச்சல் போன்றவால் பாதிக்கப்பட்டவா்களின் சளி மாதிரிகளை தோராயமாக சேகரித்து, மொத்தம் 21 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா எனப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனைக்காக சிறப்பு உபகரணங்கள் தருவிக்கப்பட்டன.

பரிசோதனை முடிவில் தற்போது கரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக ஆா்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வகை வைரஸ் பாதிப்புகள் புதியவை அல்ல. எனவே, அவை ஒரு வாரத்துக்குள் குணமடைந்துவிடக் கூடியவைதான். அதேவேளையில் முதியவா்கள், இணைநோய் உள்ளவா்கள், நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டாமிவிா் எனப்படும் வைரஸ் எதிா்ப்பு மருந்து வழங்கலாம். அந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கையிருப்பு உள்ளன.

அடுத்த சில நாள்களுக்குள் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும். முதியவா்கள், எதிா்ப்பாற் குறைந்தவா்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அப்படி சென்றாலும் முகக்கவசம் அணிவது நல்லது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com