நான் ஏழை மக்களுக்காக உழைக்கிறேன்; காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தனக்கு குழி தோண்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், தான் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் நலனுக்காவும் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நான் ஏழை மக்களுக்காக உழைக்கிறேன்; காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தனக்கு குழி தோண்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், தான் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் நலனுக்காவும் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களது ஆசிர்வாதம் தனக்குப் பெரிய பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடகத்துக்கு சென்று பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக கர்நாடகத்துக்கு வந்துள்ளார். 

பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

விரைவுச் சாலையை தொடங்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு என்பது அவசியம். இரட்டை என்ஜின் அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்து வரும் நிலையில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். மோடி பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை கட்டமைக்கும் நேரத்தில் காங்கிரஸானது மோடிக்கு குழி தோண்டுவதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மோடி ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மோடிக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. மக்கள் தான் எனக்கான மிகப் பெரிய பாதுகாப்பு அரண்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மத்தியில் கூட்டணித் தலைமையிலான அரசு பலரின் ஆதரவோடு ஆட்சி செய்து வந்தது. அவர்கள் ஏழை மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக செலவிட வேண்டிய கோடிக்கணக்கான பணம் காங்கிரஸ் அரசினால் கொள்ளையடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஒருபோதும் ஏழை மக்களின் துயரங்கள் குறித்து வருந்தியதில்லை. அவர்களது வலியும் காங்கிரஸுக்கு புரிந்ததில்லை. 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தீர்கள். எனது தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் பாடுபட்டது. ஏழை மக்களின் வலியினை எனது அரசு புரிந்து கொண்டது.

ஏழை மக்களின் துயரினைப் போக்க பாஜக அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com