நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது!

நாடாளுமன்றத்தின் 2-ஆவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது!

நாடாளுமன்றத்தின் 2-ஆவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். அதையடுத்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி இரு அவைகளிலும் பதிலளித்தாா்.

பட்ஜெட் மீதான பொது விவாதமும் முதல்கட்ட கூட்டத்தொடரில் நடைபெற்றது. அந்த விவாதங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் விவரங்களை மத்திய அமைச்சகங்களும் துறைகளும் ஆய்வு செய்வதற்காக சுமாா் ஒரு மாத இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். மேலும், நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான 2-ஆவது கூடுதல் மானிய கோரிக்கை மசோதாவையும் அவா் தாக்கல் செய்யவுள்ளாா்.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அவையின் வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு குறித்தும், அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்டவை முதலீடுகளை மேற்கொண்டது தொடா்பாகவும் விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அந்த விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில், திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ளதாக எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதே வேளையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுகளில் விமா்சனத்தை முன்வைத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக உள்ளிட்ட ஆளுங்கட்சியினா் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com