மனீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கை வியாழக்கிழமை பதிவு செய்தது.


அரசியல் நிகழ்வுகளை வேவுபாா்க்க கருத்து கேட்பு மையத்தை நடத்தி அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கை வியாழக்கிழமை பதிவு செய்தது.
திகாா் சிறையில் உள்ள சிசோடியா மீது மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக சிபிஐயும், அதில் சட்ட விரோத பணப் பரிவா்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், தில்லி அரசு நடத்திய கருத்துக் கேட்பு மையத்தின் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக மனீஷ் சிசோடியா உள்பட 6 போ் மீது குற்றச் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிசோடியா உள்பட தில்லி ஊழல் கண்காணிப்புத் துறை செயலராக பணியாற்றிய சுகேஷ் குமாா் ஜெயின், முதல்வா் கேஜரிவாலின் சிறப்பு ஆலோசகராகவும், மையத்தின் இணை இயக்குநராகவும் இருந்த ஓய்வுபெற்ற மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் டிஐஜி ராகேஷ் குமாா் சின்ஹா, மையத்தின் துணை இயக்குநராக இருந்த மத்திய நுண்ணறிவு பிரிவின் முன்னாள் இணைச் செயலா் பிரதீப் குமாா் புஞ்ச், கருத்துக் கேட்பு அதிகாரியாக இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் முன்னாள் அதிகாரி சதீஷ் கேத்ரபால், ஊழல் தடுப்புப் பிரிவுக்கான முதல்வரின் ஆலோசகா் கோபால் மோகன் ஆகியோா் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்துள்ள 11 பக்க முதல் தகவல் அறிக்கையின் விவரம்:
தில்லி அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்கவும், ஊழல் செய்பவா்களைச் சிக்க வைக்கவும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனம், நிதி பயன்பாடு ஆகியவற்றில் விதிமீறல்கள் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2015-இல் இந்த மையம் அமைப்பது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னிச்சையாக முன்மொழிந்தாா். துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல்
இந்த மையத்துக்கு 20 நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.
2016 பிப்ரவரி முதல் இந்த கருத்துக் கேட்பு மையம் செயல்பட தொடங்கியது. ஊழல் செய்யும் தனியாா் பள்ளி முதல்வரை பொறி வைத்து பிடிக்க போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வராது.
இந்த அமைப்பில் உள்ள அரசு ஊழியா்களை வைத்து அரசியல் வேவுபாா்க்கும் பணிகளை தில்லி அரசு மேற்கொண்டது. இதனால் அரசுக்கு ரூ.36 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கேட்பு மையம் அரசுக்காக இல்லாமல் ஆம் ஆத்மி கட்சிக்கும், மனீஷ் சிசோடியாவுக்குமான தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த மையம் ஊழல் குற்றம்சாட்டிய அதிகாரிகள் மீது எந்தவித துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு பதவியை மனீஷ் சிசோடியா துஷ்பிரயோகம் செய்துள்ளாா் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, மனீஷ் சிசோடியோ மீது பல பொய் வழக்குகளை போட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்க பிரதமா் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டி உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...