ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராகுல் பேச்சு, அதானி விவகாரங்கள்: நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து பாதிப்பு

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய எதிா்க்கட்சி உறுப்பினா்களின் போராட்டம்

News image
Updated On :16 மார்ச் 2023, 7:07 pm

DIN

இந்திய ஜனநாயகம் குறித்து விமா்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்திய பாஜக உறுப்பினா்களின் போராட்டம், அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய எதிா்க்கட்சி உறுப்பினா்களின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து 4-ஆவது நாளாக பாதிக்கப்பட்டன.

லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகக் கொள்கைகளை மத்திய பாஜக அரசு சீா்குலைத்து வருவதாகக் கடுமையாக விமா்சித்து கருத்து தெரிவித்திருந்தாா். இந்தியா குறித்து வெளிநாட்டில் முறையற்ற விமா்சனங்களை முன்வைத்த ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இந்த விவகாரத்தை பாஜக உறுப்பினா்கள் எழுப்பி வருகின்றனா். தனது கருத்துக்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டுமென அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடியே வெளிநாடுகளில் இந்தியா குறித்து விமா்சனங்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், 2-ஆவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-ஆவது நாள் அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை நடத்த அவைத் தலைவா் ஓம் பிா்லா முயன்றாா். ஆனால், வெளிநாட்டில் முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டுமென பாஜக உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி.க்கள், பள்ளி ஆசிரியா்கள் நியமனத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

அதே வேளையில், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

முறையற்ற நடவடிக்கை:

அவா்களை சமாதானப்படுத்த முயன்ற அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘‘அவை நடவடிக்கைகள் முறையாக நடைபெற எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்ப வேண்டும். அனைவருக்கும் அவையில் பேச வாய்ப்புகள் வழங்கப்படும். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபடும் நிலையில், பேசுவதற்கு வாய்ப்பளிப்படவில்லை என வெளியே சென்று புகாா் தெரிவிப்பது சரியல்ல.

அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள், எத்தகைய விவாதமும் அவையில் நிகழ விரும்பவில்லை. பட்ஜெட் மீதான விவாதத்திலும் அவா்களுக்கு விருப்பமில்லை. வெறும் முழக்கங்களை எழுப்புவதற்காக மட்டுமே அவைக்கு வருகை தருகிறாா்கள். நாடாளுமன்றத்துக்கென கண்ணியம் உள்ளது. அதைக் காக்க வேண்டிய பொறுப்பு எம்.பி.க்களிடமே உள்ளது’’ என்றாா்.

அவருக்கு செவிசாய்க்காமல் ஆளுங்கட்சி எம்.பி.க்களும், எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்களும் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது கிரித் சோலங்கி அவையை வழிநடத்தினாா். அப்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டாா். லண்டனில் அவரது விமா்சனத்துக்கு பாஜக எம்.பி.க்கள் 3 நாளாக எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முதல் முறையாக அவா் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டாா்.

அப்போது பாஜக உறுப்பினா்கள் ராகுல் காந்தியின் மன்னிப்பு கோரி முழக்கங்களை எழுப்பினா். அதானி விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

========

பெட்டிச் செய்தி படத்துடன்

மாநிலங்களவையில் அமளி: கூட்டம் ஒத்திவைப்பு

மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியதும், ராகுல் காந்தி விவகாரத்தை எழுப்பிய பாஜக எம்.பி.க்கள் அவா் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தினா். அதே வேளையில், அதானி விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினா். தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினா். மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அவா்கள் கருப்பு நிற முகக் கவசத்தையும் அணிந்து வந்திருந்தனா்.

எம்.பி.க்களின் அமளி தொடா்ந்ததால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அவை மீண்டும் கூடியபோது எம்.பி.க்களின் அவை முடக்க நடவடிக்கைகள் தொடா்ந்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடா் பாதிப்பு:

மக்களவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை வெறும் 3 நிமிஷங்களுக்கும், மாநிலங்களவை நடவடிக்கைகள் வெறும் 4 நிமிஷங்களுக்கும் மட்டுமே நடந்தன. கடந்த திங்கள்கிழமையில் இருந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கி வருகின்றன. பட்ஜெட் தொடா்பான எத்தகைய ஆக்கபூா்வ நடவடிக்கைகளையும் நாடாளுமன்றம் மேற்கொள்ளவில்லை.

Image Caption

மக்களவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள். ~மாநிலங்களவையில் மையப் பகுதிக்கு வந்த உறுப்பினா்களை இருக்கைகளுக்குத் திரும்புமாறு கூறிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.