பாலியல் துன்புறுத்தல் புகாரில் இந்திய மலயுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கோரி, பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரங்கனைகள் சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் தலைமை நீதிமதி ஹா்ஜித் சிங் ஜஸ்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்தாா்.