மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம் கருத்து

நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம் கருத்து


கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து பல சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டும், பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டும் வருகிறது. 

கர்நாடகத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது.

இதனை ஒரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் உயர்ந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்படவேண்டும்.

கர்நாடக மக்கள் பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசாங்கத்தின் பணபலத்தையும் வலிமையையும் எதிர்கொண்டுள்ளனர்.

பெரும்பான்மை மேலாதிக்கம், மதக்காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன்செயல் என்று சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய நாட்டைத் தற்காத்து வெற்றி பெற்றிருக்கிறோம் என்று பள்ளுப் பாட வேண்டும்.

நமது மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா, மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி பயணித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும்

வீர தீரத்துடன் போராடி வெற்றிக்கு பாடுபட்ட கர்நாடக காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும், இனி நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com