ஷாருக் கான் உடனான உரையாடல் பதிவுகளை தாக்கல் செய்தார் சமீர் வாங்கடே

லஞ்சம் தொடர்பான எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பதை முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நிரூபித்துள்ளார்.
ஷாருக் கான் உடனான உரையாடல் பதிவுகளை தாக்கல் செய்தார் சமீர் வாங்கடே


மும்பை: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம், ஹிந்தி நடிகர் ஷாருக் கானுடனான உரையாடல் பதிவில், லஞ்சம் தொடர்பான எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பதை முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நிரூபித்துள்ளார்.

இதன் மூலம், மே 22ஆம் தேதி வரை இந்த வழக்கில் சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி நடிகா் ஷாருக்கானின் மகன் ஆா்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்காமல் இருக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரி சமீா் வான்கடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் இருந்த சொகுசு கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆா்யன் கானை என்சிபி கைது செய்தது. அதனைத் தொடா்ந்து அவா் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில், அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

முன்னதாக இந்த வழக்கை என்சிபியின் மும்பை மண்டல தலைவராக இருந்த சமீா் வான்கடே விசாரித்து வந்தாா். அதன் பின்னா், அந்த வழக்கு என்சிபியின் சிறப்பு விசாரணை குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்றப்பட்டது.

இதனைத்தொடா்ந்து வழக்கு தொடா்பாக மும்பை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த என்சிபி, ஆா்யன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததற்கோ, பயன்படுத்தியதற்கோ போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்தது. அதேவேளையில், வான்கடே தலைமையில் நடைபெற்ற விசாரணையில் குறைபாடுகள் இருந்ததாக எஸ்ஐடி தெரிவித்தது.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஆா்யன் கானை சிக்கவைக்காமல் இருக்க சமீா் வான்கடே உள்பட 5 போ் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை அவா்கள் முன்பணமாக பெற்றதாகவும் சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத்தொடா்ந்து மும்பை, தில்லி, ராஞ்சி, கான்பூரில் வான்கடே சம்பந்தப்பட்ட 29 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள வரிசெலுத்துவோா் சேவைகள் தலைமை இயக்குநரகத்துக்கு சமீா் வான்கடே பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com