மகாராஷ்டிர முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மராத்தா சமூக போராட்டக்காரர்கள்!

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்வதற்கு கால அவகாசம் கோரிய நிலையில் அம்மாநில முதல்வருக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு
மகாராஷ்டிர முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மராத்தா சமூக போராட்டக்காரர்கள்!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் படங்களுக்கு கருப்பு மை பூசி மராத்தா சமூக போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எட்டப்பட்ட பிறகு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் ஏன் தாமதம் என மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே கேள்வி எழுப்பியுள்ளார். 

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மகாராஷ்டிர அரசுக்கு எதற்காக கால அவகாசம் வேண்டும். நாங்கள் பொறுமையைக் கடைபிடிப்போம், ஆனால் எதற்காக உங்களுக்கு கால அவகாசம் தேவை என்பதை தெளிவாகக் கூறுங்கள். அதன்பிறகு நீங்கள் கேட்டது போல கால அவகாசம் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம்” என்று தெரிவித்தார். 

மேலும், “இட ஒதுக்கீடு பெறும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற போவதில்லை. இனிமேல் நான் தண்ணீர் கூட அருந்தமாட்டேன். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து கட்சியும் ஒரே போல செயல்படுகின்றன. அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை” என்று ஜரங்கே பேசினார்.  

முன்னதாக, நேற்று (நவம்பர் 01) நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com