கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாகக் கூறி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இதேபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 3 மசோதாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலனுக்காக இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஆளுநரின் நடத்தையானது சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் உள்ளிட்ட நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்களையே சிதைப்பதாக உள்ளது” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன், “அரசியலமைப்பின்படி சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை காரணமின்றி ஆளுநர் தாமதப்படுத்த முடியாது” என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை நடவடிக்கைகளை தடுப்பதாகக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆளுநர் மசோதாக்களை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான ஒப்புதலைக் கூட தராமல் தாமதப்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி பஞ்சாப் அரசும் வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரண்டு மசோதாக்களுக்கு புரோஹித் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.