வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு!

வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு சென்று வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு!

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு சென்று வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்.17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் விதிகளை மீறி வாக்குச் சாவடிக்குள் கைபேசிகளை எடுத்துச் சென்று வாக்களிக்கும்போது புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக விதிஷா மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

கூடுதல் தேர்தல் அதிகாரி சஞ்சய் அளித்த புகாரின்பேரில் 17 பேர் மீது ஐபிசி பிரிவு 188 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 128-ன் கீழ் வழக்கு பதிந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய விதிஷா மாவட்ட ஆட்சியர் உமாசங்கர் பார்கவ், “வாக்குச் சாவடிக்குள் கைபேசி மற்றும் புகைப்படக் கருவிகள் அனுமதி கிடையாது. ஆனால் சில வாக்காளர்கள் ரகசியமாக கைபேசியை வாக்குச்சாவடிக்குள் கொண்டுசென்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர்கள் வாக்களிக்கும்போது அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயல் என்று கூடுதல் தேர்தல் அதிகாரி சஞ்சய் கூறிய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் கைபேசியை எடுத்துச் சென்றுள்ளது அங்கு பணியில் இருந்தவர்களின் அலட்சியத்தையும் காட்டுகிறது. மேலும் இத்தகைய விதிமீறல்கள் தேர்தல்களை பாதிப்பதற்கும் வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தார். 

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 17 நபர்களும் வாக்களித்த வாக்குச்சாவடிகளில் அப்போது பணியில் இருந்தவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் நவ.17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்.3-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com