சொன்னது அனைத்தையும் செய்துமுடித்துள்ளது பாஜக: பிரதமர் மோடி

தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செய்து முடித்துள்ளது என்று பேசினார்.
சொன்னது அனைத்தையும் செய்துமுடித்துள்ளது பாஜக: பிரதமர் மோடி

பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செய்து முடித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவ.30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் தெலங்கானாவின் காமாரெட்டி பகுதியில் இன்று (நவ.25) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார். 

பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “பாஜகவின் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்த்தாலே நாங்கள் சொன்னது அனைத்தையும் செய்து முடித்துள்ளோம் என்பது மக்களுக்கு தெரிய வரும். முத்தலாக் முறைக்கு முடிவு கட்டுவோம் என்றோம், அதனைச் செய்துள்ளோம். 

அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை நீக்குவோம் என்று சொன்னோம், அதனையும் செய்துள்ளோம். அதைப்போலவே ஒரு பதவி ஒரு ஓய்வூதியம், மகளிர் இடஒதுக்கீடு, ராமர் கோயில் என நாங்கள் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். 

இதேபோல தெலங்கானாவிலும் பாஜக ஆட்சி அமைத்தால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என்று பேசினார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com