இந்திய அரசியலமைப்பு தினம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து

74-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
Published on
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு பதிவில் கூறியுள்ளதாவது, “இந்திய அரசியலமைப்பே நமது ஜனநாயகத்தின் உயிர்நாடியாகும். 74-வது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், ஒவ்வொரு இந்தியருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிசெய்யும் விதத்தில் அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவோம். 

இன்று நமது அரசியலமைப்பின் ஆன்மா பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அரசியலமைப்பு அளித்துள்ள சுதந்திர உரிமைகளை ஒடுக்க முயற்சித்து வருகின்றனர்.

சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. அரசு நிறுவனங்கள் சிப்பாய்கள் போல பயன்படுத்தப்படுகின்றன. கருத்து வேறுபாடே குற்றமாக்கப்படுகிறது.

அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அரசியலமைப்பின் மீது திட்டமிட்ட கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. 

எளிய மக்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை எதிர்த்து நிற்க வேண்டிய நேரம் இது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்தப் போரில் முன்னணியில் நின்று போராடி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் வெறுப்புக்கெதிராக அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவை பரப்பப்பட்டன. 

நமது அரசியலமைப்பு மற்றும் அதன் நெறிமுறைகள் மீதான தாக்குதல் குறித்து ஒவ்வொரு குடிமகனும் கேள்வி எழுப்ப வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியது போல், நாமும் அச்சமின்றி போராடி, நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டியது அவசியம்.

அதற்காக எழுச்சியூட்டும் தலைவர்களிடமிருந்து உத்வேகம் பெற வேண்டிய நாள் இன்று. பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத், கே.எம்.முன்ஷி, சரோஜினி நாயுடு, அல்லாடி கிருஷ்ணசாமி, ராஜ்குமாரி அம்ரித் கௌர் மற்றும் பல முக்கிய தலைவர்களை நாம் நாள்தோறும் நினைவுகூர்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.” என்று கார்கே தெரிவித்துள்ளார். 

இந்திய அரசியலமைப்பு வரைவானது அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1949 நவம்பர் 26-ம் நாளே அரசியலமைப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com