
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், அலிபுர்துவாரில் இருந்து சிலிகுரிக்கு சரக்கு ரயில் ஒன்று இன்று காலை 7.20 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ராஜபத்காவா என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது சரக்கு ரயில் மோதியது.
இந்த சம்பவத்தில் இரண்டு குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காடுகள் நிறைந்த ராஜபத்காவா பகுதி வடக்கு வங்கத்தில் பக்ஸா புலிகள் காப்பகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
வனப்பகுதியிலிருந்து யானைகள் இரையை தேடியும், தண்ணீருக்காகவும் இருப்புப் பாதையை கடப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு கடக்கும்போது அந்த வழியாக செல்லும் ரயில்களில் அவை அடிபட்டு உயிரிழப்பது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.