ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோவால் பரபரப்பு

அரசுப் பேருந்துகளுக்கு கடுமையான சவாலாக அமைந்திருக்கிறது ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோ.
ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோவால் பரபரப்பு


அரசுப் பேருந்துகளுக்கு கடுமையான சவாலாக அமைந்திருக்கிறது ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோ.

பொதுவாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்தான் மழைக்காலங்களில் குடைபிடித்தபடி பயணிகள் செல்லும் காட்சிகளைப் பார்த்திருப்போம். இங்கே, ஏர் இந்தியா விமானத்தின் நடுப்பகுதியில் மழைநீர் வடிகிறது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த விடியோவில், இருபக்கமும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுக்கு நடுப்பகுதி முழுவதும் மழை நீர் கொட்டுகிறது. இந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அதனை விடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர அது வைரலாகிவிட்டது.

சில இருக்கைகள் இருக்கும் பகுதிகளிலும் மழை நீர் கொட்டுகிறது. இதனை பல பயணிகளும் புகைப்படங்களையும் விடியோவாக எடுத்தும் பகிர்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விமானம் எங்கிருந்து எங்கு இயக்கப்படுகிறது என்ற தகவலை பயணி வெளியிடவில்லை. ஏர் இந்தியா விமானம் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், ஏர் இந்தியா.. எங்களுடன் பறந்து செல்லுங்கள் -  இது ஒரு பயணமாக மட்டும் இருக்காது, ஒரு மிகச் சிறந்த அற்புதமான அனுபவமாகவும் இருக்கும் என்று அதன் விளம்பரத்தை கேலி செய்யும் வகையில் பகிர்ந்திருந்தார்.

இது தொழில்நுட்பக் கோளாறாலும் நடந்திருக்கலாம். ஆனால், மழையால், விமானத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து பயணிகள் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சமும் பயணிகளிடையே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் விளக்கம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிகிறது.

ஒரு பக்கம் மழை பெய்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் பயணிகள் மிகவும் சாதாரணமாக எதுவும் நடக்காததுபோல விமானத்தில் பயணிப்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அதே வேளையில், ஒரு சில விடியோவில், இருக்கைகளில் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் சிலர் அதிருப்தி அடைந்ததாகவும் தகவர்லகள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com