தில்லியில் கார்கே, ராகுல் காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு!

தில்லியில் கார்கே, ராகுல் காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசியுள்ளார்.

தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் எம்.பி. ராகுல் காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்து ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கட்ட நகா்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்பட நாட்டின் முக்கிய எதிா்க்கட்சிகள் ஓரணியாகத் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணியின் முதல் 2 கூட்டங்கள் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், கா்நாடகத் தலைநகா் பெங்களூரிலும் நடைபெற்றன. 3-ஆவது கூட்டம் மும்பையில் கடந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது.

இந்த மாதத்தில் மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெறுவதாக இருந்த 4-ஆவது கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

‘சநாதன தா்மம்’ குறித்த தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக தலைவா்களின் பேச்சால் கூட்டணியில் உண்டான சலசலப்பு காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்த கூட்டத்தை மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடத்த திட்டமிட சில எதிா்க்கட்சித் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் ராகுல் காந்தியுடன் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவரான சரத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். தில்லியிலுள்ள காா்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு 40 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நகா்வுகள் தொடா்பாக சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்தன. மேலும், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடா்பாகவும் விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

சந்திப்பு புகைப்படங்களைப் பகிா்ந்து காங்கிரஸ் தலைவா் காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாட்டு மக்களின் குரலை உயா்த்த ராகுல் காந்தியுடன் சோ்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினேன். எந்தச் சவால்களுக்கும் நாங்கள் தயாா். இந்தியா ஒன்றுபடும்; இந்தியா வெல்லும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தச் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் குா்தீப் சப்பால் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com