தெலங்கானா பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!

தமிழகத்தைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
தெலங்கானா பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!
Published on
Updated on
2 min read

தமிழகத்தைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15,75,900 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 

இந்த திட்டம் தமிழக மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தை பின்பன்றி தெலங்கானாவிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

காலை உணவுத் திட்டத்திற்கு மாநில அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் உணவை ருசி பார்த்து பின்னர், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் மாநில அமைச்சர்கள் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 

மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்ல சத்தான உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், தசரா விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும், இம்மாதம் இறுதியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள 67,147 அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 23 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார். 

வகுப்புகள் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும். 

காலை உணவாக இட்லி சாம்பார், கோதுமை ரவா, உப்புமா, சட்னி, பூரி உருளைக்கிழங்கு, குருமா, தக்காளி சாதம், கிச்சடி மற்றும் பொங்கல் ஆகியவை வழங்கப்படும். 

இந்த திட்டத்தை தசரா பரிசாக கடந்த மாதம் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்தார். 

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதின் மூலம், படிப்பில் அவர்களின் கவனத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை கேசிஆர் அனுப்பியது

மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கி இத்திட்டத்தை அறிமுகப்படுத்த கேசிஆர் முடிவு செய்தார்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டம் மற்ற மாநிலகளுக்கு முன்னோடியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com